ஆம்ஸ்டெர்டாம், ஜூலை 31 – ஹில்வெர்சும்மில் எஞ்சியுள்ள எழுபது சவப்பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள எம்எச்17 விமானப் பேரிடரில் உயிரிழந்தவர்களின் சடலங்கள், டச்சு இராணுவ மையத்தில் உள்ள வசதிகள் மூலம் தடவியல் ஆய்வுகள் மற்றும் பேரிடர் சடலங்கள் அடையாளம் காணுதல் (Disaster Victim Identification) போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டன.
இது குறித்து மலேசிய சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கூறுகையில், நேற்று வரை கார்கிவ், உக்ரேனில் இருந்து 227 சவப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. 70 சவப்பெட்டிகள் திறக்கப்பட்டன என்று தெரிவித்தார்.
தடவியல் ஆய்வின் அடிப்படையில், இரண்டு அல்லது மூன்று வாரங்களில் இந்த பரிசோதனைகள் நிறைவுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் சுப்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் மலேசிய சுகாதார அமைச்சு, பலியான மலேசியப் பயணிகளின் கைரேகைகள், பல் பதிவுகள் மற்றும் மரபணு சோதனைகள் ( டி.என்.எ) பற்றிய விவரங்களை சேகரித்துள்ளது என்றும் சுப்ரா தெரிவித்தார்.
சடலங்களின் முழு பரிசோதனைகளுக்காக அனைத்து தரவுகள் மற்றும் பதிவுகளை நெதர்லாந்தின் இண்டெர்பொல் விசாரணைக்காக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் சுப்ரா குறிப்பிட்டார்.
விமானப் பேரிடரில் உயிரிழந்த மலேசியர்களின் உறவினர்களிடமிருந்தும் மரபணுக்கள் சோதனைக்காக பெறப்பட்டுள்ளதாகவும் சுப்ரா விளக்கமளித்தார்.