Home கலை உலகம் திரைவிமர்சனம்: ஜிகர்தண்டா – ஒருமுறை பருகிப் பார்க்கலாம்!

திரைவிமர்சனம்: ஜிகர்தண்டா – ஒருமுறை பருகிப் பார்க்கலாம்!

841
0
SHARE
Ad

jigarthanda mp3 songs free downloadகோலாலம்பூர், ஆகஸ்ட் 1 – ஜிகர் என்றால் இந்தியில் இதயம், தண்டா என்றால் குளிர்… இதயத்தை குளிரச் செய்யும் ஒரு பானம். பெயர் என்னவோ வட இந்தியப் பெயராக இருந்தாலும், தமிழ்நாட்டில் அதுவும் குறிப்பாக மதுரையில் இந்த பானம் மிகவும் புகழ் பெற்றது.

மதுரையைச் சுற்றி நடக்கும் கதை என்பதால் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இந்த படத்திற்கு ஜிகர்தண்டா என்ற பெயரை சூட்டியிருக்கக்கூடும்.

இன்றைய சூழ்நிலையில் சினிமாவில் கதைக்கு தான் பஞ்சம். எப்படிப்பட்ட கதையை படமாக எடுத்தாலும் அதில் முந்தைய படங்களில் சாயல் வந்துவிடுகின்றது.

#TamilSchoolmychoice

அதனால் புதுமையான, அதே நேரத்தில் வித்தியாசமான கதை வேண்டும். அதற்கு ஏதாவது ஒரு உண்மை சம்பவத்தை தான் படமாக எடுக்க வேண்டும்.

சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்கள் அப்படிப்பட்ட உண்மை கதைகளை தேடி எப்படியெல்லாம் அலைவார்கள் என்பதை மிக வித்தியாசமான முறையில் ஜிகர்தண்டா படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக்.

குறும்பட இயக்குநர் என்பதை கடந்து பெரிய பட்ஜட் படம் இயக்க வேண்டும் என்ற கனவோடு, தயாரிப்பாளரின் தேவையை அறிந்து, ரவுடி கும்பலைத் தேடி மதுரைக்கு செல்லும் கதாப்பாத்திரத்தில் சித்தார்த் மிக எதார்த்தமாக நடித்திருக்கிறார்.

ரவுடிகளை பார்க்கும் போது முகத்தில் காட்டும் பயம், மிரட்சி என அற்புதமான முகபாவனைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இருந்தாலும், திரைக்கதையில் ஆங்காங்கே சில தொய்வுகளால் நம்மால் ஜிகர்தண்டாவை முழுமையாக ரசித்து ருசித்து பருக முடியவில்லை.

சூடான வெயிலுக்கு ஜிகர்தண்டாவை கொடுத்து பருக வைத்து, அதை நாம் பருகிக் கொண்டிருக்கும் போதே நம்மை அள்ளிக் கொண்டு போய் பனிப் பிரதேசத்தில் வைத்தது போல் படத்தில் நகைச்சுவைக்காக வைக்கப்பட்ட சில காட்சிகள் நமது ஆர்வத்தை குறைக்கின்றன.

Jigarthanda_movie_stills(5)கதைச் சுருக்கம்:

தொலைக்காட்சி குறும்படப் போட்டி ஒன்றில் கலந்து கொள்ளும் கார்த்திக் (சித்தார்த்) அங்கு நீதிபதியாக வரும் பிரபல இயக்குநரான நாசரால் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார். ஆனால் இன்னொரு நீதிபதியான நரேனுக்கோ சித்தார்த்தின் படம் மிகவும் பிடித்துப் போய்விடுகின்றது.

இதனால் இரு இயக்குநர்களுக்குகிடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகின்றது. கோபத்தின் உச்சிக்கு செல்லும் நரேன் தானே சித்தார்த்தின் படத்தை தயாரிக்கப் போவதாக நிகழ்ச்சியில் பொதுவில் அறிவிப்பு செய்கின்றார்.

ஆனால் நரேனின் அலுவலகம் சென்ற சித்தார்த்திற்கோ அதிர்ச்சி காத்திருக்கிறது. காரணம் ஒரு ரவுடி கும்பல் பற்றிய கதையை தான் தயாரிப்பேன் என்று நரேன் சித்தார்த்திடம் கூறுகின்றார்.

தயாரிப்பாளர் கூறியது போல் ரவுடி கும்பல் பற்றிய வித்தியாசமான கதையை தேடி அலையும் சித்தார்த், மதுரையில் மிகப் பெரிய ரவுடியான சேதுவின் வாழ்க்கையை படமாக எடுக்க அவரை தேடி மதுரைக்கே செல்கிறார்.

ரவுடி சேது பற்றிய கதையை எவ்வாறு தெரிந்து கொள்கிறார். அந்த படத்தை இயக்கினாரா? அதில் யார் கதாநாயகனாக நடித்தது? என பல திருப்பங்களுடன் பின்பாதி கதை நகர்கின்றது.

Jigarthanda-Songs-Reviewநடிப்பு:

படத்தில், குறிப்பாக மூன்று பேரின் நடிப்பு மிகப் பிரமாதம் என்று சொல்ல வைக்கின்றது. முதலில் ரவுடி சேது கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் சூது கவ்வும் புகழ் பாபி சிம்ஹா.

நரைத்த முடி, மீசை தாடியுடன், மதுரை பாஷையில் அசல் ரவுடியை போலவே தோன்றுகின்றார். சூது கவ்வும் படத்தில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்த சிம்ஹாவா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு அவரது நடிப்பு நம்மை பிரமிக்க வைக்கின்றது.

“உயிர எடுத்துட்டு உள்ள வரோம்… உயிர் போனாத்தேன் இத விட முடியும்” என்று ரவுடிகளின் வாழ்க்கை பற்றிய எதார்த்தமான வசனத்தை சிம்ஹா உச்சரிக்கும் பாணி அழகு.

சிரித்துக் கொண்டே திடீரென கோபப்பட்டு மிரட்டுவது, தன் மீது மக்களுக்கு பயம் போய்விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பது என சிம்ஹா மனதில் நிற்கின்றார்.

இரண்டாவது சித்தார்த்… ஏற்கனவே இதே போன்ற பயந்த சுபாவம் கொண்ட கதாப்பாத்திரத்தை பல படங்களில் செய்து வருவதால் அவரது நடிப்பு மேலும் மெருகேறியிருக்கின்றது. சித்தார்த்தின் ட்ரேட் மார்க் நல்ல பையன் சிரிப்பை கேமரா படம் பிடிக்க தவறவில்லை.

மூன்றாவது கருணாகரன்… கருணாகரன் வரும் காட்சிகள் அனைத்தும் மிக ஆர்வமாக இருக்கின்றன. அவரது எதார்த்தமான நடிப்பும், நகைச்சுவை உணர்வும், உடல்மொழியும் நம்மை ரசிக்க வைக்கின்றது.

இது தவிர, கௌரவத் தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். மதுரை பெண்ணாக லட்சுமி மேனன் கட்சிதமாகப் பொருந்தினாலும் அவ்வளவாக ரசிகர்களை கவரவில்லை.

வாய்ப்பு ஒரு தேவதை மாதிரி.. அதை ஒருமுறை தவறவிட்டால் திரும்பவும் வரவே வராது என்று சொல்லும் காட்சிகளில் பழம்பெரும் நடிகர் மனதை தொடுகின்றார்.

ஒளிப்பதிவு மற்றும் பாடல்கள்

கேவமிக் யு ஆரியின் ஒளிப்பதிவு மதுரை வீதிகளை மிக அழகாக படம் பிடித்திருக்கின்றது. பெரும்பாலான காட்சிகள் வீட்டிற்குள்ளேயே எடுக்கப்பட்டிருப்பதால் இயல்பாக இருக்கின்றது. பிரம்மிக்க வைக்கும் படியான காட்சிகள் எதுவும் இல்லை.

கிணற்றில் வைத்து எடுக்கப்பட்டிருக்கும் பாடல் காட்சி பார்ப்பதற்கு வித்தியாசமாகவும், புதுமையான முயற்சியாகவும் உள்ளது.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கின்றார். படத்தில் காட்சிகளுக்கு ஏற்ப பின்னணி இசை சிறப்பாக அமைந்திருக்கின்றது. கண்ணம்மா, டிங் டாங், பாண்டியநாடு போன்ற பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.

ரசிக்க முடியாமல் போனவை 

சேதுவை பற்றி சொல்லும் போது அவரை ஏதோ ஒருவித சைக்கோத்தனம் கொண்ட ரவுடியாக சித்தரித்து கூறப்படுகின்றது. ஆனால் காட்சிகளில் அது போன்ற ஒரு உணர்வை கொடுக்கவில்லை.

சேது தனது இளம் வயதில் நடந்த சம்பவங்களை நினைவு கூறும் போது, அங்கு ரவுடி சேதுவாக நடிகர் விஜய் சேதுபதி வருகின்றார். சேதுவின் இளம் வயதாக விஜய் சேதுபதி காட்டப்படுகின்றாரா? அல்லது சித்தார்த் தான் அவ்வாறு கற்பனை செய்து கொள்கின்றாரா என்பதற்கு காட்சிகளில் தெளிவு இல்லை.

அவ்வளவு கொடூரமான ரவுடி, நடிப்பு பயிற்சியில் ஆசிரியரிடம் அடி வாங்குவதும், கேலி பொருளாக்கப்படுவதும் நகைச்சுவைக்காக வைக்கப்பட்டாலும், நமக்கு சிரிப்பு ஏனோ வரவில்லை.

தான் கொலை செய்த ஒருவனின் மனைவியை குழந்தையோடு ஏற்றுக் கொண்டு செய்த பாவத்தை சேது தீர்த்து கொள்ளும் காட்சி தளபதி காலத்து பழைய டெக்னிக் என்பது ஒருபுறம் இருக்க,

யாரும் ஆதரவில்லாத காரணத்தால் இன்னொரு ரவுடிக்கு மனைவியாகும் நிலை இன்றைய காலத்தில் பெண்களுக்கு இல்லை. அங்கிள் இல்லை அப்பான்னு கூப்பிடுன்னு சேது அந்த குழந்தையிடம் சொல்லும் காட்சி முகம் சுளிக்க வைக்கின்றது.

ஒரு ரவுடி திருந்தி நல்லவனாகி நடிகராக ஆவதால் பிரச்சனை இல்லை… அவனுக்கு திறமை இருந்தால் பிழைத்துக் கொள்வான்….ஆனால் ஒரு இயக்குநர் ரவுடியாக மாறி நடிகர்களை மிரட்டி நடிக்க வைத்தால், எப்படிப்பட்ட தரமான படங்களை கொடுக்க முடியும் என்று மனதிற்குள் எழுந்த கேள்வியோடு திரையரங்கில் இருந்து வெளியேறும்படியாக படத்தின் முடிவு இருந்தது.

மொத்தத்தில் ஜிகர்தண்டா ஒருமுறை பருகிப் பார்க்கலாம்.

– ஃபீனிக்ஸ்தாசன்