மாஸ்கோ, ஆகஸ்ட் 2 – அமெரிக்காவின் நிற்பந்தத்திற்கு பணிந்து ரஷ்யா மீது விதித்துள்ள பொருளாதாரத்தடையால் பெரும் பாதிப்புக்கு ஆளாகப்போவது ஐரோப்பாதான் என்று வர்த்தக வல்லுனர்களால் ஆருடங்கள் கூறப்படுகின்றன.
பன்னெடுங்காலமாக அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இருந்து வரும் பனிப்போர் உக்ரைன் விவகாரத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. உக்ரைன் விவகாரத்தில் சற்றும் பிடியை தளர்த்திக் கொள்ளாத ரஷ்யா, மேற்குலக நாடுகளின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள தயாராகி விட்டதாகவே பார்க்கப்படுகின்றது.
இது பற்றி ரஷ்யாவின் முன்னணி நிதி நிறுவன வல்லுனர்கள் கூறுகையில், “ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 28 உறுப்பு நாடுகளில் பெரும்பான்மையான நாடுகளுக்கு, ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகளில் உடன்பாடுகள் இல்லை.
எனினும், அமெரிக்காவின் நிர்பந்தத்திற்கு இணங்க ஐரோப்பா, அந்நாட்டின் கைப்பாவையாக செயல்படுகிறது” என்று கூறியுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பொருளாதாரத் தடைகளுக்கு சற்றும் மசியாத பு டின் அரசு, ரஷ்யாவில் உள்ள அமெரிக்காவின், ‘மெக்டொனால்டு’ (Mcdonald) உணவகங்களில் சுகாதாரமான முறையில் உணவுகள் தயாரிக்கப்படுகிறதா என ஆய்வுகளை மேற்கொண்டது.
மேலும், ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் பழங்கள் மற்றும் அமெரிக்காவிலிருந்து வரும் கோழி இறைச்சிகள் இறக்குமதியை தடை செய்வது குறித்து முக்கிய அதிகாரிகளுடன் புடின் ஆலோசனை நடத்தி வருகின்றார்.
ஐரோப்பாவில் இறக்குமதியாகும் இயற்கை எரிவாயுவில் பெரும்பங்கினை ரஷ்யா வகிக்கின்றது. பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டவுடன், ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் எரிவாயு விநியோகத்தை நிறுத்தப்பட்டது.
இன்னும் சில மாதங்களுக்கு மட்டுமே, ஐரோப்பாவில் எரிவாயு சேமிப்பு இருப்பதால், பெரும் சிக்கலுக்கு ஐரோப்பா ஆளாகி உள்ளது. மேலும், ஐரோப்பாவின் முன்னணி நிறுவனங்களான ‘அடிடாஸ்’ (Adidas), ‘வோக்ஸ்வேகன்’ (Volkswagen) மற்றும் ‘ரெனால்ட்’ (Renault) போன்ற நிறுவனங்கள் ரஷ்யாவில் விரைவில் தடை செய்யப்பட இருக்கின்றன.
ரஷ்யாவில் சிறப்பாக இயங்கி வந்த ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்கள் பெரும் சிக்கலை சந்தித்துள்ளதால், வரும் காலங்களில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பெரும் பொருளாதார சிக்கல் காத்திருப்பதாகவே தெரியவருகின்றது.
அண்டை நாடுகளில் புதின் சர்வாதிகாரியாக சித்தரிக்கப்பட்டாலும், உலக நாடுகளின் எதிர்ப்புகளுக்கு அஞ்சாத அவரின் செயல்பாடுகள், உள்நாட்டு மக்களால் பெரிதும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. இதன் காரணமாக புடினின் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவே பார்க்கப்படுகின்றது.