பிரசல்ஸ் : 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரேன், மோல்டாவா இரண்டு நாடுகளும் வேட்பாளர் அந்தஸ்துடன் இணைத்துக் கொள்ளப்பட்டன.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான உக்ரேனின் வேட்புமனு குறித்து முடிவெடுக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் மன்றம் நேற்று வியாழக்கிழமை(ஜூன் 23) பிரசல்சில் கூடியது.
ரஷியாவின் தாக்குதலால் நிலைகுலைந்து போயிருக்கும் உக்ரேனின் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (படம்) ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரேனை இணைத்துக் கொள்ளும்படி ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்.
அவரின் கோரிக்கையை ஏற்று ஐரோப்பிய ஒன்றியம் உக்ரேனை ஏற்றுக் கொண்டாலும், அந்த அமைப்பில் முழுமையான அந்தஸ்து கொண்ட நாடாக உக்ரேன் இடம் பெற மேலும் பல ஆண்டுகள் ஆகலாம்.
27 நாடுகள் கட்டம் கட்டமாக உக்ரேனின் புதிய அங்கத்துவத்தை பரிசீலிக்கும். ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டங்கள், கொள்கைகளையும் உக்ரேன் முழுமையாகப் பின்பற்றுகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர்தான் முழு அந்தஸ்து கொண்ட நாடாக உக்ரேன் ஏற்றுக் கொள்ளப்படும். தங்களின் நாட்டில் ஜனநாயக சுதந்திரம் பின்பற்றப்படுகிறது என்தையும் உக்ரேன் உறுதிப்படுத்த வேண்டும்.