சென்னை, ஆகஸ்ட் 4 – தமிழக முதல்வரை அவமதித்த இலங்கையின் துணைத் தூதரகத்தை இழுத்து மூடக் கோரி தமிழ் திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் நடிகர் விஜய், சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இன்று காலை பத்து மணிக்கு இலங்கை தூதரகத்தின் முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் திரையுலகின் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இலங்கை அரசுக்கு எதிரான கோஷங்களை முன்வைத்தனர். “தாயைப் பழித்தவனை தரணியை ஆண்டாலும் விடமாட்டோம்”, “உலகம் போற்றும் தமிழர் தாயை பழிக்க நினைக்காதே” “நீ கொச்சைப்படுத்த நினைத்தது தமிழக முதல்வரை அல்ல 10 கோடி தமிழர்களின் தாயை”!
“தேசப் பிதா என்றால் காந்தி’‘பெரியார் என்றால் ஈவெரா’ அம்மா என்றால் எங்க முதல்வர்தான்”! என இவ்வாறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை வைத்துக் கொண்டு, ஒரு பந்தலில் அமர்ந்திருந்தனர் திரையுலகப் பிரமுகர்கள்.
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார், தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தர், சீமான், இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், கலைப்புலி தாணு, டி சிவா, மனோபாலா, நடிகர்கள் விஜய், சூர்யா, சிவகுமார், ராஜேஷ் உள்பட பலரும் பங்கேற்றனர்.