கம்பார், ஆகஸ்ட் 4 – விதி என்பது வலியது என்பார்கள். ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் விதி திடீரென நுழைந்து எப்படியெல்லாம் அவனை ஆட்டுவிக்கும் என்பதற்கு உதாரணம் மறைந்த எதிர்க் கட்சித் தலைவர் கர்ப்பால் சிங்கின் வாகன ஓட்டுநராகப் பணியாற்றிய சி.செல்வம் என்பவரது வாழ்க்கை.
கர்ப்பால் உயிரைப் பலிகொண்ட கார் விபத்து நடந்த நாளில் முகத்தை மூடிக் கொண்டு அழும் கர்ப்பாலின் வாகன ஓட்டுநர் செல்வம்….
இந்திய குடியுரிமை பெற்றவரான செல்வம் கர்ப்பால் சிங்கிடம் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தார். சீராக சென்று கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் கடந்த ஏப்ரல் 17 அதிகாலை நிகழ்ந்த கார் விபத்து அவரது வாழ்க்கையையே மாற்றியமைத்து விட்டது.
அந்த கார் விபத்தில் கர்ப்பால் மரணமடைய, அதனைத் தொடர்ந்து செல்வம் கடந்த ஜூலை 9ஆம் தேதி காவல் துறையினரால் கம்பார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் கவனக் குறைவாகவும், ஆபத்தான முறையிலும் வாகனம் ஓட்டியதற்காக குற்றம் சாட்டப்பட்டார்.
சாலை போக்குவரத்து சட்டம் பிரிவு 41 (1) பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட செல்வத்திற்கு, குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை அல்லது 20,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
ஜாமீனில் எடுக்க ஆள் இல்லை
ஜூலை 9ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்ட செல்வத்திற்கு, 5,000 ரிங்கிட் ஜாமீன் தொகை நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், ஜாமீன் செலுத்த முடியாத செல்வம் கடந்த ஒரு மாத காலமாக சிறையில் வாடி வருகின்றார்.
கர்ப்பால் குடும்பத்தினர் யாரும் அவரை ஜாமீனில் எடுக்கவில்லை என்பதுதான் சோகம்.
கர்ப்பாலின் மகனும் புக்கிட் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம் கர்ப்பால் சிங்
ஆனால், கர்ப்பாலின் மகனும், அந்த கார் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தவருமான ராம்கர்ப்பால் இதுபற்றி கூறுகையில், அந்த விபத்து தொடர்பான வழக்கில் தான் ஒரு சாட்சி என்பதாலும், காவல் துறையில் தான் ஒரு சாட்சி அறிக்கை கொடுத்திருப்பதாலும் தன்னால் செல்வத்திற்கு ஆதரவாக ஜாமீன் தொகை செலுத்தவோ, வழக்காடவோ முடியாத நிலைமையில் இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றார்.
இருப்பினும், குடும்ப நண்பர்கள் மூலமாக, மற்ற வழக்கறிஞர்கள் மூலமாக செல்வத்திற்கு யாராவது உதவி செய்திருக்கலாமே, மாறாக செல்வத்தை சிறையில் வாட விட்டிருப்பது நியாயமா என்பது போன்ற சர்ச்சைகளும் எழுந்துள்ளன.
பார்ட்டி சிந்தா மலேசியா கட்சியின் உதவித் தலைவர் டத்தோ ஹூவான் செங் குவான் ஜாமீன் செலுத்தினார்
கடந்த ஒரு மாத காலமாக, சிறையில் ஜாமீன் தொகை செலுத்த முடியாமலும், யாருடைய உதவி கிடைக்காமலும் சிறையில் வாடி வந்த செல்வத்தின் பரிதாப நிலைமை சில நாட்களுக்கு முன்னால் தகவல் ஊடகங்களில் வெளிவந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இதனைத் தொடர்ந்து, செல்வம் முன் பின் அறியாத, பார்ட்டி சிந்தா மலேசியா (Parti Cinta Malaysia) அரசியல் கட்சியின் உதவித் தலைவர் டத்தோ ஹூவான் செங் குவான் (படம் – மேலே) வடிவில் அவருக்கு விமோசனமும் விடிவு காலமும் பிறந்துள்ளது.
இன்று, கம்பார் நீதிமன்ற வளாகம் வந்த டத்தோ ஹூவான் செல்வத்திற்கான ஜாமீன் தொகை 5,000 ரிங்கிட்டை செலுத்தியுள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் தான் இந்த பணத்தைச் செலுத்தி செல்வத்தின் விடுதலைக்கு வழிவகுப்பதாகவும், இதற்குப் பின்னர் விடுதலையாகும் அவர் இனி தனக்கு ஏற்ற வழக்கறிஞரை அமர்த்திக்கொண்டு வழக்காட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தான் இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தைப்பிங் சிறைச்சாலையில் இருந்து செல்வம் நாளை விடுதலையாகவிருக்கின்றார்.
எதிர்வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி புதன்கிழமை அவரது வழக்கு கம்பார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது.