கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 – நெடுங்காலமாக வசதி குறைந்த மாணவர்களுக்காக தனிப்பட்ட பாடப் பயிற்சி (டியூஷன்) வழங்கி நூற்றுக் கணக்கானவர்களை பட்டதாரிகளாகவும், கல்வியில் சிறந்தவர்களாகவும் உருமாற்றியிருப்பவர்கள் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தினர்.
ஆண்டுதோறும் ஸ்ரீ முருகன் நிலையம் நடத்தி வரும் கல்வி யாத்திரை நாட்டின் 12 இடங்களில் நேற்று ஒரு சேர வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
எல்லா 12 நிலையங்களிலும் ஏறத்தாழ 30,000 பேர் வரை இந்த நிகழ்வுக்காக கூடியிருப்பார்கள் என தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன .
தேர்வுகளுக்கு செல்லும் முன்னர் மாணவர்கள் கல்வி யாத்திரை என்ற பெயரில் விரதம் இருந்து ஆலயங்களுக்கு சென்று வணங்கிய பின்னர், தங்களின் கல்வியை நம்பிக்கையோடு தொடர வேண்டும் என்ற நோக்கில் இந்த கல்வி யாத்திரை பல்லாண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றது.
ஸ்ரீ முருகன் கல்வி நிலையம், முன்னாள் பல்கலைக் கழக விரிவுரையாளரான டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் தம்பிராஜாவால் (படம்) பல ஆண்டுகளுக்கு முன்னால் தொடக்கப்பட்டது.
யூபிஎஸ்ஆர், பிஎம்ஆர், எஸ்பிஎம், எஸ்டிபிஎம் போன்ற கல்வித் தேர்ச்சிகளுக்காக இந்திய மாணவர்களைத் தயார் செய்யும் – பலப்படுத்தும் நோக்கத்தில் நாடு முழுமையிலும் பல்வேறு பள்ளிகளில் சிறப்பு கூடுதல் பயிற்சிகளை வழங்கும் நோக்கத்தைக் கொண்டது ஸ்ரீ முருகன் கல்வி நிலையம்.
இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையையும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் மாதம் தோறும் வசூலிக்கின்றது.
கடந்த ஆண்டுகளில் இந்தியர்களின் கல்வி வளர்ச்சிக்காக அரும்பணியாற்றியுள்ள ஸ்ரீ முருகன் கல்வி நிலையம், அரசு சார்பற்ற ஓர் இயக்கமாகும்.
வர்த்தக ரீதியாக இயங்கும் ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்திற்கு அரசாங்கம் ஏன் மிகப் பெரிய தொகையை மான்யமாக வழங்கியுள்ளது என்று ஒரு சில எதிர்க் கட்சித் தலைவர்கள் அண்மையில் சர்ச்சையைக் கிளப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.