கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 – 2014-ம் ஆண்டின் முதல் பாதியில் மலேசியாவின் வர்த்தக மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது. 2013-ம் ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை, வளர்ச்சி அடைந்துள்ள மொத்த வர்த்தகம் 9.9 சதவீதம் ஆகும்.
தென் கிழக்கு ஆசியாவில் 2014-ம் ஆண்டு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுள்ள நாடுகளில் மலேசியாவும் ஒன்றாகும். இது பற்றி சர்வதேச தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளதாவது:-
“நாட்டின் மொத்த வர்த்தக மதிப்பு கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் பாதியில் 64.55 பில்லியன் ரிங்கிட்களில் இருந்து 715.6 பில்லியன் ரிங்கிட்களாக உயர்ந்துள்ளது.”
“கடந்த ஆண்டு 4 சதவீதமாக இருந்த ஏற்றுமதி இந்த ஆண்டு 12.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மதிப்பு 380.14 பில்லியன் ரிங்கிட்கள் ஆகும்.”
“சிறந்த வர்த்தகத்திற்கான தொடக்கமாக இந்த ஆண்டு அமைந்ததால் 44.68 பில்லியன் ரிங்கிட்கள் உபரியாக கிடைத்துள்ளது” என்று வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் மலேசியாவின் வர்த்தகம் 7.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோல் சீனாவுடனான வர்த்தக வளர்ச்சி +7.7 சதவீதமும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் +8.2 சதவீதமாக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து முக்கிய சந்தைகளிலும் மலேசியாவின் வர்த்தகம் இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்று இருப்பதற்கு அரசு மேற்கொண்டுள்ள சிறந்த முயற்சிகளும் திட்டங்களுமே காரணம் என்று வர்த்தக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.