நியூயார்க், ஆகஸ்ட் 7 – மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் சியர்ரா லியோன் மற்றும் லைபீரியா பகுதிகளுக்கு விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
எபோலா வைரஸின் நோய் தாக்குதலுக்கு ஆளாகி சுமார் 600-க்கும் மேற்பட்டோர் சியர்ரா லியோன், லைபீரியா, கினியா மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளில் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் லைபீரியாவில் எபோலா நோய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவிகள் செய்து வந்த கென்ட் பிரான்ட்லி மற்றும் நான்சி ரைட்போல் ஆகிய அமெரிக்க மருத்துவர்களுக்கு நோய் தாக்குதல் இருப்பது தெரிய வந்தது.
அவர்களின் இரத்தத்தை பரிசோதித்ததில் அவர்களுக்கு எபோலா நோய் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், எபோலா வைரஸின் தாக்கத்தை உணர்ந்து பயணிகளின் பாதுகாப்பு கருதி சியர்ரா லியோன் மற்றும் லைபீரியாவுக்கு விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
பிரிட்டிஷ் ஏர்வேஸைத் தொடர்ந்து அரபு எமிரேட்ஸ் நிறுவனமும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது பற்றி ஆலோசனை செய்து வருகின்றது.