நாட்டில் நடக்கும் மத கலவரங்கள் பற்றி விவாதிக்க வலியுறுத்தி, சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு அவர் கோஷமிட்டார். அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். இதனால், அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
நாடாளுமன்ற கூட்டம் நேற்று கூடியதும், கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு, நாட்டில் அதிகரித்து வரும் மத கலவரங்கள் பற்றி விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
ஆனால், கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விவாதிக்க சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மறுப்பு தெரிவித்தார். இதன் காரணமாக, காங்கிரஸ் கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
எப்போதுமே அமைதியாக இருக்கும் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியும் கட்சியினருடன் சேர்ந்து கண்டன கோஷமிட்டார். மேலும், அவரது தலைமையில் எதிர்க்கட்சியினர் சபாநாயகர் இருக்கை முன்பாக கூடி அரசுக்கு எதிராகவும் கோஷமிட்டனர்.
இந்த விவகாரம் தொடர்பாக உணவு நேரத்தில் விவாதிக்கலாம் என சபாநாயகர் உறுதியளித்தும் காங்கிரஸ் கட்சியினர் அமைதியடையவில்லை.
இதனால், அவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், அவை மீண்டும் கூடியதும் உணவு நேரத்தில் இப்பிரச்சனையை காங்கிரஸ் கையில் எடுத்து அமளியில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் உறுப்பினர் மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில், ‘இந்த அரசு பதவி ஏற்ற பிறகு நாட்டில் மத கலவரங்கள் அதிகரித்து விட்டது. இதற்கு பின்னால் இருப்பது யார்? இதைப்பற்றி விவாதிக்க வேண்டும். நாட்டின் பல இடங்களில் கலவரங்கள் நடந்துள்ளன‘ என்றார்.
இவருக்கு ஆதரவாக காங்கிரஸ் உறுப்பினர்களும், ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, ஆம் ஆத்மி கட்சியினரும் சேர்ந்து ‘நீதி வேண்டும் நீதி வேண்டும்‘ என கோஷமிட்டனர். அப்போது அவையில் சோனியா காந்தி இருந்தார். ஆனால், அமைதியாக எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார்.
இதுபோன்ற தவறான குற்றச்சாட்டுகளை கூறுவது கண்டனத்துக்குரியது. தேவையில்லாத பிரச்சனைகளை காங்கிரஸ் கிளப்புகிறது‘ என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கோஷமிட்டனர். ‘இந்த அரசு ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறது. இங்கு நீதியில்லை‘ என மல்லிகார்ஜூன கார்கே அரசை கடுமையாக தாக்கி பேசினார்.
எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர் அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அவையில் இருந்து வெளியே வந்த ராகுல் காந்தி, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
“நாடாளுமன்றத்தில் எங்களை பேச விடுவதில்லை. விவாதம் நடத்த நாங்கள் விரும்புகிறோம். ஆனால், அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இந்த அரசு இல்லை. சபாநாயகர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார்.
ஒருவர் குரல் மட்டுமே இந்த நாட்டில் கேட்க வேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள்‘ என பிரதமர் மோடியை சூசகமாக குறிப்பிட்டு பேசினார் ராகுல்.