நியூயார்க், ஆகஸ்ட் 7 – விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டு போரின் போது இலங்கை அரசு செய்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணையை ஐ.நா மனித உரிமை ஆணையம் தொடங்கியுள்ளது.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த இறுதி கட்ட போரின் போது, இலங்கை இராணுவம் சரணடைந்த விடுதலைப் புலிகள் மற்றும் பெண்கள் உட்பட பலரை இரக்கமின்றிக் கொன்று குவித்ததாக உலக நாடுகளால் குற்றம் சாட்டப்பட்டது.
இது குறித்து சர்வதேச விசாரணை நடத்த ஜெனிவாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி போர்க்குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் தொடங்கியுள்ளது.
இது தொடர்பான புகார்கள் அனைத்தையும் அக்டோபர் 30-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தால் சித்திரவதைக்கு ஆளான மக்கள் மற்றும் ஊடகங்கள் தங்கள் ஆதாரங்களை காணொளிகள், நிழற்படங்கள், ஒலிப்பதிவுகள் போன்ற எத்தகைய வடிவிலும் அனுப்பலாம் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் புகார்களை ஆங்கிலத்தில் மட்டுமின்றி தமிழ் மொழியிலும் அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.