கோலாலம்பூர், ஆகஸ்ட் 9 – நாட்டின் மூன்று முக்கிய வங்கிகளான ‘மலேசியா பில்டிங் சொஸைட்டி’ (Malaysia Building Society) , ‘சிஐஎம்பி குழுமம்’ (CIMB Group), ‘ஆர்எச்பி கேபிடல்’ (RHB Capital) ஆகியவற்றை இணைத்து ஒருங்கிணைந்த இஸ்லாமிய வங்கியாக மாற்றும் முயற்சி முக்கிய கட்டத்தை எட்டி உள்ளது.
மலேசியாவின் இரண்டாவது பெரிய வங்கியான சிஐஎம்பி குழுமம், எம்பிஎஸ்பி மற்றும் ஆர்எச்பி கேபிடல் ஆகிய இரண்டு வங்கிகளையும் தங்கள் வங்கியுடன் இணைத்து மலேசியாவில் மிகப்பெரிய இஸ்லாமிய வங்கியாக உருவாக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது.
சிஐஎம்பி-ன் முயற்சிகளுக்கு மற்ற இரண்டு நிறுவனங்களும் உடன்பட, இணைப்பிற்கான பேச்சுவார்த்தை கடந்த மாதம் துவங்கப்பட்டது. மலேசிய மத்திய வங்கியும் இதற்கான அனுமதியை அளித்துள்ள நிலையில், இன்னும் மூன்று மாதங்களில் ஒருங்கிணைந்த வங்கியை உருவாக்குவதற்கான ஒப்பந்தங்கள் எட்டப்படும் என்று கூறப்படுகின்றது.
இது பற்றி எம்பிஎஸ்பி வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ அகமத் சாய்னி உத்மான் கூறுகையில், “மூன்று நிறுவனங்களில் இருந்தும் நிதி மற்றும் சட்டம் தொடர்பான ஆலோசனைகளை வழங்க ஆலோசகர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப் பெரிய வங்கியை உருவாக்கும் முயற்சிக்கு அடிப்படைத் தேவைகளான நிதி, வர்த்தகம், மனித வளம் உட்பட முக்கிய பிரிவுகள் குறித்து முழு வீச்சில் ஆலோசனைகள் நடந்து வருகின்றன.”
“மேலும், ஊழியர்களுக்கான ‘தன்னார்வ பிரிப்பு திட்டம்’ (VSS) பற்றி இப்பொழுது கருத்துக்கள் கூற சரியான தருணம் இதுவல்ல” என்று கூறியுள்ளார்.
ஒருங்கிணைந்த மிகப்பெரிய இஸ்லாமிய வங்கியை உருவாக்கும் முயற்சி வர்த்தகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தினாலும், வங்கிகளின் இணைப்பில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள், முன்னேற்றம் கண்டுள்ள மலேசிய வங்கித்துறையில், இதனால் ஏற்படப்போகும் மாற்றங்கள் போன்ற சில காரணங்களால் சிறிது தயக்கத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.