Home அவசியம் படிக்க வேண்டியவை திரைவிமர்சனம்: “மைந்தன்” – மலேசியாவின் செல்லக் குழந்தை!

திரைவிமர்சனம்: “மைந்தன்” – மலேசியாவின் செல்லக் குழந்தை!

627
0
SHARE
Ad

Maindhan 1கோலாலம்பூர், ஆகஸ்ட் 9 – ஆஸ்ட்ரோ ஷா, எஸ்எஸ் வாவாசான், சிகே பிலிம்ஸ் தயாரிப்பில் குமரேசன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மலேசியப் படம் “மைந்தன்”.

குழந்தைகள் கடத்தல் பற்றிய கதையை கருவாக வைத்து, அதில் காதல், நகைச்சுவை, சண்டைகாட்சிகள் என எல்லாம் கலந்த ஒரு கலவையாக மலேசிய ரசிகர்களுக்கு புதியதொரு சினிமா அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் குமரேசன்.

கதை ஏற்கனவே சொல்லப்பட்ட ஒரு கதை என்றாலும் கூட, முற்றிலும் மலேசியாவை மையமாகக் கொண்டு இருப்பதால், மலேசிய ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும்.

#TamilSchoolmychoice

சுமார் 9 லட்சம் ரிங்கிட் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள மைந்தனில் கேமரா தொழில்நுட்பம் இந்தியப் படங்களுக்கு நிகராக பிரம்மாண்டமான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு டேவ் நேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ப்ரேம் நாத் படத்தொகுப்பு செய்துள்ளார். 

மனீஸ் சிங் இசையமைத்துள்ளார். மணிவில்லன்ஸ் பாடல் வரிகள் எழுதியுள்ளார்.

முற்றிலும் மலேசியக் கலைஞர்களின் உழைப்பில் உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தில் புன்னகைப்பூ கீதா, ஷைலா நாயர், ராப் இசை பாடகர் சீஜே, ரேபிட் மேக், டிஎச்ஆர் உதயா, புகழ்பெற்ற பாடகர் டார்க்கி, கலமாமணி கேஸ் மணியம், கலைமாமணி ஏகவல்லி, பொன் கோகிலம், திலா லக்‌ஷ்மண், விக்கி நடராஜா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

நடிப்பு

Maindhan

மலேசியக் கலைஞர்களின் நடிப்பு மிகவும் செயற்கையாக இருக்கின்றது. படத்துடன் நம்மால் ஒன்றிவிட முடியவில்லை என்று இதுவரை கூறப்பட்டு வந்த குறைகளுக்கு இனி வேலை இருக்காது. காரணம் மைந்தன் படத்தில் நடித்துள்ள அத்தனை கதாப்பாத்திரங்களும் காட்சிகளுக்கு ஏற்ப மிக இயல்பாக நடித்துள்ளனர்.

புன்னகைப்பூ கீதாவுடன் காட்டில் உலவும் காட்சிகள், ஷைலா நாயருடன் காதல் காட்சிகள், சிறுவன் ஹனுமந்துடனான நகைச்சுவை காட்சிகள், டிஎச்ஆர் உதயாவுடனான சண்டைக்காட்சிகள் என அத்தனை காட்சிகளிலும் குமரேசன் நடிப்பில் தாங்கிப் பிடிக்கிறார்.

குமரேசன் வரும் காட்சிகள் அனைத்தும் பார்வையாளர்களுக்கு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கும் அளவிற்கு அவரின் நடிப்பு அற்புதம். ஒரு இயக்குநராக, தயாரிப்பாளராக, நடிகராக என தனது பொறுப்புகளை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார் குமரேசன்.

புன்னகைப்பூ கீதா தனது கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப கலகலப்பாக நடித்திருக்கிறார். மலைப்பாம்பை பார்த்து நடுங்குவது, காட்டுப்பன்றி துரத்தும் காட்சிகள், சண்டைக்காட்சிகள் ஆகியவற்றில் தனது நடிப்பால் ரசிகர்களை வாய்விட்டு சிரிக்க வைத்திருக்கிறார்.

படத்தின் இன்னொரு முக்கியமான கதாப்பாத்திரம் டத்தின் ஷைலா நாயர். முதல்முறையாக நடிப்பது போன்றே இல்லை. காதல் காட்சிகளில் தனது முகபாவனைகள் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த காட்சிகள் கண்டிப்பாக ரசிகர்களின் மனதைத் தொடும். ஷைலா நாயர், குமரேசன் தோன்றும் காதல் காட்சிகளில் பின்னணி இசையாக ஒரு மனதை வருடும் இசை கொடுத்திருந்தால் அந்த காட்சிகள் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். தனது இனிமையான குரலால் ரசிகர்களின் மனதை கொள்ள கொண்ட பிரபல பாடகியான ஷைலா நாயர் சரியான நேரத்தில் நடிப்புத்துறையில் கால் பதித்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும். இனி இன்னும் நிறைய படங்களில் அவரது அற்புதமான நடிப்பை கண்டு ரசிக்கலாம்.

டிஎச்ஆர் வானொலி புகழ் உதயா ‘மைந்தன்’ திரைப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரம் செய்திருக்கிறார். ஏற்கனவே ‘வெட்டி பசங்க’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அதில் ஒரு காட்சியில் மட்டுமே வருவார். ஆனால் இந்த படத்தில் அவருக்கு நிறைய காட்சிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. குழந்தைகளிடத்தில் நல்லவராக நடிப்பது. சட்டென தனது முகபாவனைகளை மாற்றி மிரட்டுவது என உதயா மிரட்டுகின்றார்.

“ஐயோ கள்ளன்… கள்ளன்” ….”ஆமா இட்லி கல்லுமாதிரி தான் இருக்கு… எப்படி சாப்புடுறது” இந்த காட்சியில் நிச்சயம் ரசிகர்கள் வயிறு குலுங்க சிரிக்கப் போவது நிச்சயம். ராபிட் மேக் ஒரு நல்ல பாடகர் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அவருக்குள் ஒரு நல்ல நகைச்சுவை நடிகர் இருக்கிறார் என்பது இந்த படத்தில் மூலம் தெரியவந்திருக்கிறது.

இது தவிர அருண் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ஹனுமந்த், சீஜே, டார்க்கி, ஷாமினி, கேஎஸ் மணியம், ஏகவல்லி,  சிவக்குமார் ஜெயபாலன் ஆகியோர் வரும் காட்சிகள் படத்திற்கு கலகலப்பை சேர்த்திருக்கின்றன.

தொழில்நுட்பம்:

அண்மையில் வெளியிடப்பட்ட மலேசியப் படங்களில், குறிப்பாக இந்த ஆண்டு வெளியிடப்பட்ட படங்களில் பயன்படுத்தப்பட்டிருந்த கேமரா தொழில்நுட்பங்கள் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்து வந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

அதற்கு முன்னர் படத்தின் குறைவான பட்ஜெட் காரணமாக சாதாரண கேமராக்களில் படம்பிடிக்கப்பட்டு திரையரங்குகளில் வெளியிடப்பட்ட மலேசியப் படங்களால் மக்களிடையே மலேசியப் படங்களில் மீது ஒரு தவறான கண்ணோட்டம் நிலவி வந்தது. மலேசியப் படம் என்றாலே நாடகம் போல், குறும்படம் போல் காட்சிகள் இருப்பதாக குற்றம் சாட்டி வந்தனர்.

ஆனால் தற்போது அந்த குறைகளையெல்லாம் தீர்க்கும் விதமாக ‘மைந்தன்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவு அமைந்திருக்கின்றது.

டேவ் நேசனின் ஒளிப்பதிவு கோலாலம்பூரின் செந்தூல், பிரிக்பீட்ல்ஸ் போன்ற இடங்களை மிக அழகாக காட்டியிருக்கின்றது. குமரேசன், சீஜேவுடனான கார் ரேசிங் காட்சிகள் பிரம்மிக்க வைக்கின்றன. கடற்கரையில் படம் பிடிக்கப்பட்டுள்ள “இதயம் மேலே பறக்கிறதே” பாடல் காட்சி வண்ணமயமாக இருக்கின்றது.

என்றாலும், ஒரு சில காட்சிகளில் குமரேசனின் நிறம் மிகவும் கருப்பாகவும், சில காட்சிகளில் சராசரியாகவும் காணப்படுகின்றது. அதற்கு படத்தில் இரண்டு வெவ்வேறான கேமரா பயன்படுத்தியிருக்கக்கூடும் அல்லது கலர் கரெக்சனில் (வண்ணம் மெருகேற்றுதல்) விடுபட்டிருக்கலாம். இதை தவிர்த்து படம் முழுவதும் ஒரே மாதிரியான வண்ணத்தை கொண்டுவர முயற்சி செய்திருக்கலாம்.

பிரேம்நாத்தின் படத்தொகுப்பு காட்சிகளுக்கு ஏற்ப விளையாடியிருக்கின்றது. பல படங்களில் பணியாற்றிய அனுபவத்தை இந்த படத்தில்  சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

இசை, பாடல்கள்

மனீஸ் சிங்கின் பின்னணி இசை அற்புதம்… குறிப்பாக குமரேசன் தனது பிளாஷ்பேக் கதையில் அறிமுகமாகும் போது பின்னணி காட்சிகளுக்கு ஏற்ப மெய்சிலிர்க்க வைக்கின்றது.

“அம்சமான குலுவாலி”, “மாசோ மாசோ”, “இதயம் மேலே பறக்கிறதே” போன்ற பாடல்கள் மனதில் நிற்கின்றன.

திரைக்கதை

தொடக்கத்தில் அரைமணி நேரத்திற்கு விறுவிறுப்பாக செல்லும் கதை, சிறுவன் கடத்தப்பட்டதற்குப் பிறகு சற்றே வேகம் குறைந்து வேறு பாதையில் பயணிக்கின்றது.

சிறுவனுக்கு என்ன ஆனது என்று படம் பார்ப்பவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், கீதாவுடனான காட்சிகள், ஷைலாவுடனான பிளாஷ்பேக் காட்சிகள் என்று கதை வேறு களத்தில் நகர்ந்து விட்டு சாவகாசமாக மீண்டும் சிறுவனை தேடும் படலத்திற்கு திரும்பும் போது அதிலிருந்த எதிர்பார்ப்பும், பரபரப்பும் குறைந்து விடுவதை நம்மால் தவிர்க்க முடியவில்லை.

குழந்தைகள் கடத்தலை மையமாகக் கொண்ட கதையா? அப்படி என்றால் அதில் இன்னும் கொஞ்சம் ஆழமான ஆராய்ச்சியும், இந்த பிரச்சனையில் இதுவரை மக்களுக்கு தெரியாத பல தகவல்களையும் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் படம் நகர்வதற்காகவும், கதையில் ஏதாவது ஒரு நிகழ்காலப் பிரச்சனையை சொல்ல வேண்டும் என்பதற்காகவும் குழந்தைகள் கடத்தல் பற்றிய சமூகப் பிரச்சனை கையாளப்பட்டிருக்கின்றது.

மலேசியாவில் பல இடங்களில் பள்ளி செல்லும் வயதில் உள்ள சிறுவர்களும், சிறுமிகளும் பேனா, ஊதுவர்த்தி போன்ற ஏதாவது ஒரு பொருளை  வைத்துக் கொண்டு விற்றுக் கொண்டிருப்பதை காண்கின்றோம். அவர்கள் எல்லாம் யார்? எங்கிருந்து வருகிறார்கள்? அவர்களுக்கு அந்த பொருட்களைக் கொடுத்து விற்க சொல்பவர்கள் யார்? என்பது மேலோட்டமாக மட்டுமே சொல்லப்பட்டிருக்கின்றது. உண்மையில் அவர்களுக்குப் பின்னால், படத்தில் வருவது போல் உதயா, டார்க்கி கதாப்பாத்திரங்கள் போல் ஒரு சிலரே உள்ளார்களா? இல்லை பெரிய அளவிலான பின்னணி உள்ளதா ? போன்றவற்றுக்கான ஆராய்ச்சிகள் இருந்திருந்தால் இந்த படம் மிகச் சிறந்த படமாக அமைந்திருக்கும்.

அவர்கள் கடத்தப்பட்டவர்களா? அப்படியென்றால் அந்த குழந்தைகளின் பெற்றோரின் தவிப்பும், வலியும் இடம்பெறும் காட்சிகளும் கட்டாயம் இருக்க வேண்டும்.

என்றாலும், ஒட்டுமொத்தமாக பார்த்தால் இது ஒரு முழு நீள பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த திரைப்படம். இதுவரை டெலிமூவி அளவிலான மலேசியப் படங்களை மட்டுமே பார்த்து வந்த மலேசிய மக்களுக்கு, பெரிய திரையில் பிரம்மாண்டமான முறையில், புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய நல்ல படத்தை கொடுத்த இயக்குநர் குமரேசனுக்கும், மைந்தன் குழுவினருக்கும் செல்லியலின் சார்பாக வாழ்த்துகள்…

மொத்தத்தில் “மைந்தன்” – மலேசியா தமிழ்சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படம் தான் என்றால் அது மிகையாகாது. அனைவரும் திரையரங்கிற்கு சென்று கட்டாயம் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு நல்ல திரைப்படம்.

– ஃபீனிக்ஸ்தாசன்