டெல்லி, ஆகஸ்ட் 9 – பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல் சந்தித்துப் பேசினார். அவரிடம் ஈராக்கின் பாதுகாப்பு நிலைமை சீர்குலைந்து வருவது குறித்து மோடி கவலை தெரிவித்தார்.
அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல் தற்போது இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின்போது, ஈராக் நிலைமையைச் சமாளிக்க அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ள திட்டங்கள் குறித்து பிரதமரிடம் சக் ஹேகல் எடுத்துக் கூறினார்.
ஈராக்கின் பாதுகாப்பு நிலைமை சீர்குலைந்து வருவது குறித்தும், அந்தப் பிராந்தியத்தில் அதன் விளைவுகள் குறித்தும் நரேந்திர மோடி கவலை தெரிவித்தார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈராக்கில் உள்ள தனது நாட்டு ராணுவ வீரர்களைப் பாதுகாக்கும் நோக்கில், இஸ்லாமியத் தீவிரவாதிகள் மீது விமானம் மூலம் தாக்குதல் நடத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
மேலும், ஈராக்கின் வடமேற்குப் பகுதியில் உள்ள மலை உச்சியில் சிக்கியுள்ள சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோருக்கு உணவுப் பொட்டலங்களை விமானம் மூலம் வீசவும் திட்டமிட்டுள்ளது.
இதற்கான அனுமதியை தனது ராணுவத்துக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது. இதுகுறித்தும் மோடியிடம் சக் ஹேகல் எடுத்துக் கூறியதாகத் தெரிகிறது.
இந்திய-அமெரிக்க இரு தரப்பு உறவுகளைப் பொருத்தவரை, இந்தியாவில் அமைந்துள்ள புதிய அரசுடன் அமெரிக்கா மேற்கொண்டு வரும் உயர்நிலை அளவிலான பேச்சுவார்த்தையை வரவேற்பதாக பிரதமர் கூறியுள்ளார்.
மேலும், தனது அமெரிக்கப் பயணத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பதாக ஹேகலிடம் மோடி கூறினார். நாம் ஒருவருக்கொருவர் என்ன செய்து கொள்ள முடியும் என்று மட்டுமே இந்தப் பயணத்தைப் பார்க்காமல்,
உலகின் தொன்மையான ஜனநாயகமும் (அமெரிக்கா), மிகப்பெரிய ஜனநாயகமும் (இந்தியா) அமைதி, நிலைத்தன்மை, செழுமை ஆகியவற்றை ஏற்படுத்துவதற்காக எவ்வாறு தோழமையைக் கட்டமைக்க முடியும் என்று பரிசீலிக்க ஒரு சந்தர்ப்பமாகவும் பார்ப்பதாக மோடி தெரிவித்ததாக பிரதமர் அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
மேலும், இரு நாடுகள் இடையிலான பாதுகாப்பு உறவுகளின் முக்கியத்துவத்தை மோடி வலியுறுத்தினார். இந்த உறவுகளில் மேலும் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் அவர் வெளியிட்டார். ஒபாமாவுடன் முதல் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக நரேந்திர மோடி அடுத்த மாத இறுதியில் அமெரிக்கா செல்வார் என்று கூறப்படுகிறது.