ஷா ஆலாம், ஆகஸ்ட் 13 – தனக்கு ஆதரவு தராத 5 ஆட்சிக் குழு உறுப்பினர்களை தான் நீக்கியதற்கு சிலாங்கூர் சுல்தான் அனுமதி தந்தார் என்றும், அதற்காக அவர் இரண்டு மணி நேர அவகாசம் மட்டுமே எடுத்துக் கொண்டார் என்றும் பதவியில் நிலை நிறுத்திக் கொள்ள இறுதிக் கட்டப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் இன்று அறிவித்தார்.
அதற்கு ஆதாரமாக சிலாங்கூர் சுல்தான் கையெழுத்திட்ட கடிதத்தையும் காலிட் இன்று பத்திரிக்கையாளர்களிடம் வெளியிட்டார்.
சம்பந்தப்பட்ட பிகேஆர் மற்றும் ஜசெக ஆட்சிக் குழு உறுப்பினர்கள் தாங்கள் மந்திரி பெசாராக தன்னை ஆதரிக்கவில்லை என்று அறிவித்த பின்னர், நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் தான் ஆட்சிக் குழு உறுப்பினர்களை நீக்கும் கடிதத்தை சிலாங்கூர் சுல்தானுக்கு எழுதியதாகவும் காலிட் தெரிவித்துள்ளார்.
இன்று எஞ்சியுள்ள 4 பாஸ் கட்சி ஆட்சிக்குழு உறுப்பினர்களோடு ஆட்சிக் குழுக் கூட்டத்தை நடத்திய பின்னர் காலிட் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார்.
தான் அனுப்பிய கடிதத்திற்கு 2 மணி நேர அவகாசத்தில் சுல்தான் பதிலளித்தார் என்றும் காலிட் கூறியுள்ளார்.
சிலாங்கூர் சட்டவிதிகளின்படி சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை நடத்த குறைந்த பட்சம் 4 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மட்டுமே தேவை என்றும் தெரிவித்துள்ள காலிட், நீக்கப்பட்டவர்கள் தங்களின் அலுவலகங்களைக் காலி செய்ய போதிய அவகாசம் வழங்கப்படும் என்றார்.
இருப்பினும் தாங்கள் இன்னும் அதிகாரபூர்வ ஆட்சிக குழு உறுப்பினர்கள்தான் என்றும், அவ்வளவு சீக்கிரமாக சுல்தான் தங்களின் நீக்கத்திற்கு அனுமதி தந்திருக்க முடியாது என்று நீக்கப்பட்ட 5 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நேற்றிரவு ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவித்திருந்தனர்.
அதற்கு பதிலடியாக சுல்தானின் கடிதத்தையே காலிட் வெளியிட்டார்.
பதவி நீக்கம் கடிதம் கிடைக்கப் பெற்றாலும், தாங்கள் இன்னும் ஆட்சிக் குழு உறுப்பினர்கள்தான் என்று கூறிக் கொண்ட 5 பேரும் இன்று வழக்கம்போல் தங்களின் சிலாங்கூர் மாநில அரசு அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.
இதற்கிடையில் நீக்கப்பட்டவர்களில் ஒருவரான ஜசெக கட்சியைச் சேர்ந்த தெங், பிகேஆர் கட்சியிலிருந்து காலிட் நீக்கப்பட்டுள்ளதால் அவர் தற்போது கட்சி அல்லாத சட்டமன்ற உறுப்பினர் என்றும் சிலாங்கூர் மாநிலம் பக்காத்தான் ராயாட் கூட்டணியால் நடத்தப்படுகின்றது என்றும் அதனால் யாரையும் நீக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.
ஆனால் இதற்கும் பதிலடியாக, பக்காத்தான் ராயாட் எனப்படும் அமைப்பு பதிவு பெற்ற அமைப்பல்ல என்று காலிட் இப்ராகிம் கூறியுள்ளார்.
சிலாங்கூர் அரசாங்கத்தில் பிகேஆர், ஜசெக, பாஸ் என கட்சி சார்பில்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் இயங்குகின்றார்களே தவிர, பக்காத்தான் ராயாட் என எந்த அமைப்பும் இல்லை என்று அதிர்ச்சி தரும் வகையில் காலிட் கூறியுள்ளார்.
தனது தற்போதைய கடமை சிலாங்கூர் மக்களின் நலன்களுக்காக, நான்கு பாஸ் ஆட்சிக் குழு உறுப்பினர்களுடன் சிலாங்கூர் அரசை நடத்துவதுதான் என்றும் அவர் அறிவித்துள்ளார்.