Home கலை உலகம் தனது உடல் வலிகளையும் கவிதையாக்கிய கவிப்பேரரசு வைரமுத்து

தனது உடல் வலிகளையும் கவிதையாக்கிய கவிப்பேரரசு வைரமுத்து

1516
0
SHARE
Ad

vairamuthu (1)ஆகஸ்ட் 14 – கவிஞர்களின் உள்ளங்களில் எழும் உணர்வுகளை – உணர்ச்சிகளை கவிதையாக வடிப்பதுதான் அவர்களின் வழக்கம். ஆனால், இதுவரை தனது உள்ளத்து ஒலிகளை கவிதையாக்கி, பாடலாக்கி, தமிழுக்கு மகுடம் சூட்டிய கவிப் பேரரசு வைரமுத்து, அண்மையில் தனக்கு நேர்ந்த உடல் வலிகளையும் அழகான கட்டுரையாக்கி – கவிதையாக்கி நம்மை மகிழ்வித்திருக்கின்றார்.

வைரமுத்துவுக்கு 60ஆம் அகவை நிறைவை முன்னிட்டு, கோவையில் நிகழ்ந்த அவரது மணிவிழா கொண்டாட்டங்களின் தகவல்களில் உலகெங்கும் உள்ள அவரது இரசிகர்கள் திளைத்திருக்க,

அந்த மணிவிழாக் கொண்டாட்டங்களோடு, “தமிழ் கட்டாயப் பாடமாக வேண்டும், நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும், தேசிய நூலாக திருக்குறள் அறிவிக்கப்பட வேண்டும்” போன்ற கோரிக்கைகளோடு நடத்தப்பட்ட ‘தமிழ் நடை’ என்ற பேரணியிலும் வைரமுத்து, ஆயிரக்கணக்கானோர்களுடன் கலந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

இந்த மகிழ்ச்சியான நிகழ்வுகளைத் தொடர்ந்து அவருக்கு உடல் நலக் குறைவு என்ற அதிர்ச்சிச் செய்தி பலரை கவலைக்குள்ளாக்கியது.

தான் மட்டுமே, அனுபவித்துக்கொண்டிருந்த அந்த உடல் வலிகளையும், நோயின் தன்மையையும் ‘கொண்டாடிவிட்டுப் போகிறது நோய்’ என்ற தலைப்பில் ஆனந்த விகடன் வார இதழில் அண்மையில் விவரமாக, அழகான கட்டுரையாக, கவிதை வரிகளுடன் வைரமுத்து வரைந்திருக்கின்றார்.

உடல் வலிகளோடு கோவை நிகழ்வில் பங்கேற்பு

Vairamuthuதனக்கு நேர்ந்த உடல் கோளாறை அறிந்து கொண்டாலும், ஓய்வெடுக்காமல், வலிகளோடு, கோவையில் நடந்த மணிவிழாவில் கலந்து கொண்ட வைரமுத்து, அவருக்கு எடுக்கப்பட்ட – மருத்துவமனைகளில் வழக்கமாக புழங்கப்படும் – ‘எம்.ஆர்.ஐ. ஸ்கேன்’ என்ற சிகிச்சை முறைக்கு தமிழ் மொழிபெயர்ப்பொன்றையும் குறிப்பிட்டிருக்கின்றார்.

“காந்த ஒத்ததிர்வுத் தோற்றுருவாக்கல்” என அவர் எம்ஆர்ஐ ஸ்கேனைக் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவர்களின் உதவியோடும், மருந்துகளின் துணையோடும், உடல் வலிகளைப் பொறுத்துக் கொண்டுதான் அவரது மணிவிழாவில் அவர் பங்கேற்றிருக்கின்றார்.

அந்த சிரமமான சூழ்நிலையை –

“பழத்தின் அழகைப் பாராட்டுவீர்;

உள்ளிருந்து குடையும் வண்டின்

குடைச்சலை யாரறிவீர்”

– என்ற கவிஞர் அபி என்பவரின் கவிதை வரிகளைக்கொண்டு வைரமுத்து வர்ணித்திருக்கின்றார்

கோவை மணிவிழா நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, உடல் நலக் குறைவுகளுக்கிடையிலும், சென்னை திரும்பி, தான் முடிக்க வேண்டிய சினிமாப் பாடல்களை எழுதி முடித்துக் கொடுத்து விட்டு, வேறு சில கடமைகளையும் முடித்துவிட்டு, மீண்டும் கோவை திரும்பி புகழ்பெற்ற முதுகெலும்பு நிபுணர் மருத்துவர் ராஜசேகரிடம் அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கின்றார்.

அறுவைச் சிகிச்சை முடிந்ததும் கண் விழித்துள்ள கவிஞர் தனது சிறுநீர்ப் பை நிறைந்திருந்ததை “என் சிறுநீர்ப்பை நிறைந்து நவம்பர் மாதத்துச் செம்பரம்பாக்கமாய் ததும்பி நிற்கின்றது. வெளியேற வாசல் தேடி எல்லாத் திசைகளையும் எல்லாத் திசுக்களையும் முட்டுகிறது. ஆனால் வெளியேற்றும் திறம் என் உடலுக்கு இல்லை” என மனம் நொந்து கூறியுள்ளார்.

சிறுநீர்ப் பை நிறைந்துவிட்டதை செம்பரம்பாக்கம் ஏரியோடு ஒப்பிட்டிருப்பதில், அவர் சந்தித்த உடல் உபாதையை நாம் உணரும் அதே வேளையில், அவரது வார்த்தை வீச்சுகளில் ஒளிந்திருக்கும் அவரது நகைச்சுவை உணர்வையும் நம்மால் ரசிக்க முடிகின்றது.

றுவை சிகிச்சை மருத்துவருக்காக ஒரு கவிதை

Vairamuthuசாதாரண நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தால் வெறும் கட்டணம் மட்டுமே மருத்துவர்களுக்கு கிடைக்கும்.

ஆனால், கவிஞருக்கு வைத்தியம் பார்த்த மருத்துவருக்கு கூடுதலாக ஒரு கவிதையும் கிடைத்திருக்கின்றது.

தன் வருத்தம் தீர்ந்த பிறகு மருத்துவர் ராஜசேகருக்கு ஒரு விருத்தம் எழுதிக் கொடுத்தேன் என வைரமுத்து தனது கட்டுரையில் தெரிவித்திருக்கின்றார்.

அந்த விருத்தம் இதுதான்:-

 ஆள்நடை கண்டே என்னை

அடையாளம் அறிந்த பேர்கள்

கால்நடை தளர்ந்த தென்றே

கலங்கியே நின்ற வேளை

கோல்நடை காணும் முன்னம்

கொற்றவன் போல் என்னை

மேல் நடை காணவைத்து

மேதையே ராஜ சேகர்

துரும்பொன்று நுழையும் வண்ணம்

துளையொன்று செய்து; சின்ன

எறும்பொன்று புகுதல் போலே

எந்திரம் செலுத்தி; ஒற்றை

நரம்பொன்றும் பழுது றாமல்

நலமுறச் செய்த உம்மைக்

கரும்பொன்று தந்த சொல்லால்

கவிகட்டி வாழ்த்து கின்றேன்.

மேலும், தனது கட்டுரையில் தான் சந்தித்த உடல் வலிகள், அறுவைச் சிகிச்சை ஆகியவற்றின் காரணமாக தான் உணர்ந்து கொண்ட அனுபவத் தத்துவத்தை பின்வருமாறு கவிஞர் குறிப்பிட்டுள்ளார்.

“ஒட்டு மொத்த தசைகளின் ஒத்திசைவுதான் உயிர்ப்பு. இது பிரபஞ்சத்துக்கும் பொருந்தும். இந்தப் பிண்டத்துக்கும் பொருந்தும். ஒற்றை மழைத்துளி மண்ணில் விழுவதற்கும் ஐம்பூதங்களும் ஒரே நேரத்தில் சம்மதிக்க வேண்டியிருக்கின்றது. என் பின் தசைகளின் ஒத்திசைவு இல்லாவிடில், மூளியாகிப் போகிறது முன்னுறுப்பு. எனவே, உடல் நலம் என்பது ஒட்டுமொத்த உறுப்புகளின் கூட்டணி என்ற உண்மையை என் காதில் சொல்லி வெளியேறுகிறது வலி…”

தனது கட்டுரையை நிறைவு செய்யும் முன் தனது மொத்த உடல் நோய் அனுபவங்களின்  தத்துவ சாரத்தை பின்வருமாறு முடித்திருக்கின்றார். கவிஞர்.

  • வாழ்வு சிறிது; இன்னும் இரு மடங்கு பணியாற்று.
  • உலகம் பெரிது; பேரன்பு செலுத்து.
  • உனக்காகக் கண்ணீர் விடும் கூட்டத்தின் கணக்கை அதிகரி.
  • எவர் மீதும் பகை கொள்ளாதே.
  • அன்பென்ற ஒரு பொருள் தவிர, வாழ்வில் எதுவும் மிச்சம் இருக்கப்போவது இல்லை.
  • எது கொடுத்தாலும் உலகத்துக்கு நிறைவு வராது; உன்னையே கொடுத்துவிடு.
  • உன் வாழ்வில் நீ அதிகம் உச்சரிப்பது, நன்றி என்ற சொல்லாக இருக்கட்டும்

தனக்கு நேர்ந்த உடல் நோய்க்கும் கவிதை படைத்து, தமிழை அழகுபடுத்தும் கவிப் பேரரசு வைரமுத்து, தொடர்ந்து உடல் நலத்துடன், உள்ள நலத்துடன் வீற்றிருந்து, அந்த மகிழ்வுத் தருணங்களையும் கவிதையாக்கி – எழுத்துப் படிவங்களாக்கி – தமிழ் அன்னைக்கு மேலும் சில மகுடங்களைச் சூடிக கொடுக்க வேண்டும் என நாம் அனைவரும் நெஞ்சார வாழ்த்துவோம்.

 -இரா.முத்தரசன்