கோலாலம்பூர், ஆகஸ்ட் 14 – கடந்த மார்ச் மாதம் மாயமான எம்எச்370 விமானத்தில் பயணம் செய்த 4 பயணிகளின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 111,000 ரிங்கிட் எடுக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய இந்த பண பரிமாற்றம் கடந்த ஜூலை 18-ம் தேதி, எடுக்கப்பட்டுள்ளதாக வங்கி நம்புகின்றது.
ஏடிஎம் பண பரிமாற்றம் மூலமாக பல தடவைகள், யாரோ இந்த பணத்தை எடுத்துள்ளதாக மாநகர வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறை தலைவர் இஸானி அப்துல் கானி தெரிவித்துள்ளார்.
இது குறித்து வங்கி கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி காவல்துறையில் புகார் அளித்துள்ளது.
இந்த குற்றத்தை செய்தவர்களை கண்டறிய காவல்துறை பலகட்ட விசாரணைகளை தற்போது மேற்கொண்டு வருவதாக இஸானி தெரிவித்துள்ளார்.
எனினும், வங்கியைச் சேர்ந்த அதிகாரிகளில் யாரேனும் இந்த குற்றத்தை புரிந்திருப்பார்களா என்பது குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கவில்லை.
வங்கியின் இரகசிய கேமரா மூலமாக குற்றம் செய்தவரைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இஸானி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மார்ச் 8 -ம் தேதி அதிகாலை, 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நோக்கிப் புறப்பட்ட மலேசிய விமானம் எம்எச்370, நடுவானில் மாயமானது. அனைத்துலக அளவிலான தேடுதல் வேட்டை நடத்தியும் இன்று வரை விமானம் குறித்த எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.