கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 – கூகுள் நிறுவனம் ஆப்பளின் ஐஒஎஸ் இயங்குதளத்திற்கான முன்னாள் செயலி ‘ஜெட்பேக்’ (Jetpac)-ஐ வாங்கி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுவதும், அவர்களின் தேவைகளை அறிந்து தொழில்நுட்பச் சேவைகள் மூலம் நிவர்த்தி செய்வதும் வாடிக்கை.
அந்த வகையில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான பேஸ்புக் மற்றும் ஆப்பிள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் புகழ் பெற்ற செயலிகளான ‘வாட்ஸ் அப்’ (WhatsApp) மற்றும் ‘பீட்ஸ்’ (Beats) ஆகிய செயலிகளை வாங்கின. அந்த வகையில் பயனர்களுக்கு, நகரங்களில் வழிகாட்டும் செயலியான ஜெட்பேக்கை கூகுள் வாங்கி உள்ளது.
இந்த ஜெட்பேக் செயலியானது ‘இன்ஸ்டாகிராம்’ (Instagram) மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களைக் கொண்டு குறிப்பிட்ட ஒரு நகரத்திற்கான வழிகளை ஆராய்ந்து பயனர்களுக்கு தகவல்களை அளிக்கவல்லது. தற்போது அமெரிக்காவின் முக்கிய நகரமான சான்பிரான்சிஸ்கோவை மட்டும் அடிப்படையாக செயல்படும் இந்த செயலி கூகுளின் மூலம் வெகு விரைவில் அனைத்து நாடுகளின் முக்கிய நகரங்களுக்கான தகவல்களையும் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜெட்பேக் செயலியுடனான வர்த்தகம் பற்றியோ அதன் செயல்பாடுகள் பற்றியோ கூகுள் எவ்வித அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. எனினும் ஜெட்பேக் செயலியானது அடுத்த மாதம் முதல் ‘ஆப் ஸ்டோர்’ (App Store) -ல் இருந்து நீக்கப்படும் என்ற அறிவிப்பு மட்டும் வெளியாகி உள்ளது.
ஜெட்பேக் செயலியானது ஐஒஎஸ்-ஐ காட்டிலும் கூகுளின் அண்டிரோய்டு திறன்பேசிகளில் சிறந்த பயன்பாடாக இருக்கும் என தொழில்நுட்ப நிபுணர்களால் கூறப்படுகின்றது. ஐஒஎஸ்-ஐ ஒப்பிடுகையில் அண்டிரோய்டு இயங்குதளத்திற்கான இணக்கத்தன்மை அதிகம் எனக் கூறப்படுகின்றது.