காத்மாண்டு, ஆகஸ்ட் 18 – நேபாளத்தில் ஏற்பட்ட கன மழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக கடந்த 2 வாரத்தில் மட்டும் 240 பேர் பலியாகி உள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த இரு வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் மண்களில் ஈரப்பதம் ஏறி ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. வீடுகளும் கட்டிடங்களும் இடிந்து விழுந்து தரை மட்டமாகி உள்ளதால் மக்கள் பெரும் அபாயத்திற்கு ஆளாகி உள்ளனர்.
கடந்த 3 நாட்களாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 85 பேர் பலியாகி உள்ளதாகவும், 113 பேர் காணவில்லை என்றும் கூறப்படுகின்றது.
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மற்றும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக 30 மாவட்டங்கள் அந்நியத் தொடர்புகளை இழந்துள்ளது.
அந்நாட்டில் மூன்றில் ஒரு பகுதி பலத்த சேதம் அடைந்துள்ளதாகவும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அந்நாட்டு அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வெள்ளப்பெருக்கில் சிக்கி உள்ள மக்களை மீட்பதற்காகவும், சேதமடைந்த இடங்களின் மீட்புப் பணிகளுக்காகவும் இந்தியா ஒரு விமானம் மற்றும் 3 ஹெலிகாப்டர்களை வழங்கி உள்ளது. மேலும் நிவாரண நிதியாக 4 கோடியே 80 லட்சம் ரூபாய்யையும் வழங்கி உள்ளது.