கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – நாட்டின் பல முக்கியப் பிரச்சனைகளை பிரதமர் நஜிப் துன் ரசாக் மிக மென்மையாக கையாள்கிறார் அல்லது மௌனமாக இருந்து விடுகிறார் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று தனது வலைத்தளத்தில் நஜிப்புக்கு எதிராக கடும் விமர்சனம் செய்தார்.
மகாதீரின் இந்த விமர்சனம் அம்னோ கட்சியினரிடையே மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தான் நஜிப் பதவி விலக வேண்டும் என்ற நோக்கத்தில் அவ்வாறு விமர்சனம் செய்யவில்லை என்றும், ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே அவ்வாறு சொன்னதாகவும் தெரிவித்துள்ளார்.
“நான் நஜிப் பதவி விலக வேண்டும் என்று சொல்லவில்லை. நஜிப்பின் சில கொள்கைகளை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். அவருக்கு எதிராக விமர்சனம் செய்ய யாருக்கும் துணிவு இல்லை. எனவே நான் செய்கின்றேன்” என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு விமர்சனம் செய்தால் மட்டுமே தலைவர்கள் தங்களது தவறுகளை உணர்ந்து மாற்றிக் கொள்வார்கள் என்றும் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.