சென்னை, ஆகஸ்ட் 21 – சென்னையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் ஒருவர் ஒரு ஐந்து நட்சத்திர தங்கும் விடுதியை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் ஒரு ஐந்து நட்சத்திர தங்கும் விடுதியை பிரபலமான சிங்கள நிறுவனம் வாங்கியுள்ளது. இந்நிலையில், இந்நிறுவனத்தின் தலைவர் ராஜபக்சேவுக்கு மிக நெருக்கமானவர் என்றும்,
தமிழகத்துக்குள் நேரடியாக வர முடியாத ராஜபக்சே, அரசியல், சினிமா, தொழில் முதலீடுகள் என தன் பினாமிகள் மூலம் கால்பதிக்க ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘எயிட்கென் ஸ்பென்ஸ்’ என்ற நட்சத்திர அந்தஸ்து கொண்ட பிரபல சொகுசு தங்கும் விடுதியை தற்போது ஹாரி ஜெயவர்த்தனே என்பவர் 150 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார். விரைவில் இந்த தங்கும் விடுதியில் திறப்பு விழா நடைபெற உள்ளது.
லங்கா மில்க் ஃபுட்ஸ், லங்கா மதுபான நிறுவனம் ஆகியவற்றின் உரிமையாளரான இவர், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் நெருங்கிய நண்பர் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளன.
ராஜபக்சேவும், ஹாரி ஜெயவர்தனாவும் 60:40 என்ற சதவீத அடிப்படையில் இந்த தங்கும் விடுதியை நடத்தப் போவதாக கூறப்படுகிறது. மேலும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதாவிற்கு தெரியாமல் இந்த முதலீடு நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.