பெய்ஜிங், ஆகஸ்ட் 21 – ஒரு பிரபல மனிதராக நான் இருப்பதால் எனது மகனின் செயல் எனக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் ஒரு தந்தையாக நான் மிகவும் மனமுடைந்துள்ளேன் என பிரபல நடிகர் ஜாக்கி சான், தனது மகன் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டது குறித்து தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை இரவு ஜாக்கி சானின் மகன் ஜெய்சி சானையும் (வயது 32), தாய்வான் நடிகர் கை கோவையும் (வயது 23), சீனாவின் பெய்ஜிங் நகர் காவல்துறை, போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்தது.
அவர்கள் இருவரும் ‘மாரிஜுவானா’ (marijuana) என்ற போதை வஸ்துவை உட்கொண்டது மருத்துவப் பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் இருவரும் அதனை ஒப்புக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், தனது மகனின் செயல் பற்றி நடிகர் ஜாக்கி சான் முதல் முறையாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“ஒரு பிரபல மனிதராக நான் இருப்பதால் எனது மகனின் செயல் எனக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் ஒரு தந்தையாக நான் மிகவும் மனமுடைந்துள்ளேன்.”
“நானும் எனது மகனும் நடந்த தவறுக்கு வருந்துகின்றோம். ஜெய்சி கைது செய்யப்பட்டது இளைஞர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும். ஆபத்து விளைவிக்கும் போதைப் பொருட்களில் இருந்து விலகியே இருங்கள்.”
“போதைப் பொருட்கள் வைத்திருந்த குற்றத்திற்கான விளைவுகளை ஜெய்சி சந்தித்தாக வேண்டும். அவர் செய்த குற்றத்திற்காக, ஒரு தந்தையாக நானும் அதனை சந்திக்கத் தயாராக உள்ளேன்” என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஜெய்சி சான் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், போதைப் பொருளை பயன்படுத்தியதற்காகவும், பிறருக்கு அப்பொருளை வைக்க இடமளித்ததற்காகவும் சீனாவின் சட்டப்படி அவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2009 -ம் ஆண்டு, போதை பொருளுக்கு எதிரான போராட்டத்திற்கு தூதுவராக சீன அரசாங்கத்தால் ஜாக்கி சான் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.