Home கலை உலகம் “சம்பந்தன் அரசியல் படம் அல்ல; மக்களுக்காகவே வாழ்ந்த மாமனிதரின் வரலாறு” – இயக்குநர் எஸ்.டி.பாலா

“சம்பந்தன் அரசியல் படம் அல்ல; மக்களுக்காகவே வாழ்ந்த மாமனிதரின் வரலாறு” – இயக்குநர் எஸ்.டி.பாலா

1298
0
SHARE
Ad

IMAG0182கோலாலம்பூர், ஆகஸ்ட் 22 – மலேசியாவின் பிரபல இயக்குநர் எஸ்.டி.பாலா திரைக்கதை, இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சம்பந்தன்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று தலைநகரில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் இயக்குநர் எஸ்.டி.பாலா, துணை இயக்குநர் ரோனிக்கா, ஒளிப்பதிவாளர் பூபா, கலை இயக்குநர் (Art Director) ரஜினி காந்த், படத்தொகுப்பாளர் லோகேஸ்வரன் ஆகியோர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

படத்தின் சிறப்பம்சம்

#TamilSchoolmychoice

இந்த படத்தின் சிறப்பு அம்சம் என்ன? என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த எஸ்.டி.பாலா, ” மலேசிய வரலாற்றில் இந்தியர்களுக்காக மிகவும் பாடுபட்ட தலைவர்களுள் வீ.தி. துன் சம்பந்தனும் ஒருவர். அதனால் தான் கோலாலம்பூரில் பல வீதிகளுக்கும், கட்டிடங்களுக்கும், பள்ளிகளுக்கும் துன் சம்பந்தன் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட ஒரு உன்னத தலைவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க நினைத்த போது மிகவும் கவனத்துடன் கையாண்டோம். நாங்களே நேரடியாக அவர் வாழ்ந்த ஊருக்கு சென்று அவரைப் பற்றிய விஷயங்களை சேகரித்து இந்த திரைக்கதை உருவாக்கினோம்”

“அப்போது எங்களுக்கே மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. மலேசியாவில் நம் இந்திய சமுதாயத்திற்கு இவ்வளவு மரியாதை கிடைத்திருக்கிறதா? இப்படி ஒரு தலைவர் நமக்காக வாழ்ந்திருக்கிறாரா? என்று வியந்து போனோம். நாங்கள் பார்த்து வியந்த விஷயங்களை வைத்து தான் இந்த திரைப்படத்தை உருவாக்கியிருக்கின்றோம்.”

“மலேசியாவின் உயரிய பட்டமான ‘துன்’ பட்டத்தை பெற்ற ஒரே மலேசிய இந்தியர் சம்பந்தன் அவர்கள் தான். அது மட்டுமின்றி  தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்தை நிறுவி அதன் மூலம் தொழிலாளர்களாக மட்டுமே இருந்த இந்தியர்களை முதலாளிகள் ஆக்கினார். அதைவிட ஒரு சிறப்பான விஷயம் என்னவென்றால், சம்பந்தன் அவர்கள் அமைச்சரவையில் செயல்பட்ட காலத்தில், அப்போதைய பிரதமருக்குப் பதிலாக ஒருநாள் அமைச்சரவைக்கு தலைமையும் தாங்கியும் உள்ளார்”

“இப்படிப்பட்ட மாமனிதரின் படத்தை இயக்க வேண்டும் என்று என் உள்மனதில் தோன்றியது. அதன் பின் எடுக்கப்பட்ட கடும் முயற்சிகளின் விளைவாக அவரது வாழ்க்கை இப்போது படமாக்கப்பட்டுள்ளது” இவ்வாறு எஸ்.டி.பாலா தெரிவித்தார்.

ஏன் திரையரங்கில் சென்று பார்க்க வேண்டும்?

இந்த திரைப்படத்தை ஏன் திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும் என்பது குறித்து இயக்குநர் எஸ்.டி.பாலா விளக்கமொன்றை அளித்தார்.

“வீட்டில் என்னதான் சாமி சிலைகளை வைத்து வழிபட்டாலும், தைப்பூசம், விநாயகர் சதுர்த்தி என்றால் ஆலயங்களுக்கு சென்றால் தான் நமது மனது திருப்தியடைகிறது. ஆலயங்களில் சென்று வழிபடும் போது நமது வழிபாடு முழுமையடைவது போல் நமது மனம் நிம்மதியடைகின்றது.”

“அது போல் தான்.. வீட்டில் என்ன தான் தொலைக்காட்சி பெட்டியில் படம் பார்த்தாலும், மலேசிய மக்களுக்காக பாடுபட்ட ஓர் மாமனிதரின் வாழ்க்கை வரலாற்றை மக்களோடு மக்களாக சேர்ந்து திரையரங்கில் பார்ப்பது போன்ற ஒரு திருப்தி கிடைக்காது. எனவே ஒவ்வொரு மலேசியரும் இந்த படத்தை திரையரங்கில் சென்று பார்க்க வேண்டும். இந்த படம் அனைவருக்கும் புரிய வேண்டும் என்ற காரணத்தினால் வசனங்கள் (Subtitles) ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது” என்று எஸ்.டி.பாலா விளக்கமளித்தார்.

IMAG0192தொழிநுட்பம்

கடந்த 1960 -ம் ஆண்டு காலகட்டத்தில் நடந்த சம்பவங்கள் என்பதால், ‘சம்பந்தன் திரைப்படத்தில் அப்படிப்பட்ட காட்சிகளைக் கொண்டு வர படத்தின் ஒளிப்பதிவாளர் மற்றும் கலை இயக்குநர் பல சவால்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இது குறித்து ஒளிப்பதிவாளர் பூபா கூறுகையில், “வரலாற்று நிகழ்வுகளை திரையில் கொண்டு வர சில நுட்பமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினோம். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் டிஜிட்டல் கேமெராவில் பயன்படுத்தப்பட்ட லென்ஸ் உட்பட அனைத்திலும் பல யுத்திகளை கையாண்டோம். அதே நேரத்தில் கலை இயக்குநர் ரஜினிகாந்த் எங்களுக்கு மிகவும் உதவினார்.பழைய காலத்து புகைப்படங்களை வைத்து மிக அழகாக செட்களை அமைத்துக் கொடுத்தார்” என்று தெரிவித்தார்.

இது குறித்து கலை இயக்குநர் ரஜினி காந்த் கூறுகையில், “எதிர்காலத்தில் நடக்கவுள்ளதை இப்படி தான் இருக்கும் என்று எளிதில் காட்டிவிடலாம். அதில் சில தவறுகள் இருந்தாலும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் ஏற்கனவே நடந்த ஒரு விஷயத்தை காட்டும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். அதில் சிறு தவறு தெரிந்தாலும் மக்கள் கண்டுபிடித்துவிடுவார்கள். அதனால் தான் இந்த படத்தில் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து மிகவும் கவனத்துடன் அமைத்தோம்” என்று தெரிவித்தார்.

படத்திற்கு இன்னொரு பக்கபலமாக அமைந்திருப்பது படத்தொகுப்பாளர் லோகேஸ்வரன். படம் பார்க்கும் மக்களுக்கு அந்த காலத்தின் நினைவுகளை திரையில் கொண்டு வரும் நோக்கத்தோடு வண்ணங்களை மாற்றியமைத்ததாகத் தெரிவித்தார்.

படத்திற்கு ஆன மொத்த செலவு

படத்தில் இவ்வளவு அழகான செட்களை வடிவமைத்து மிகவும் கஷ்டப்பட்டு செய்திருக்கிறீர்களே படத்திற்கு ஆன மொத்த செலவு எவ்வளவு? என்று செல்லியல் சார்பாக கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு இயக்குநர் எஸ்.டி.பாலா கூறிய பதில் நம்மை ஆச்சர்யப்பட வைத்தது.

“படம் தயாரிக்க மிக அதிக செலவு ஆச்சு என்று நான் பொய்யெல்லாம் சொல்ல விரும்பவில்லை. இந்த படத்தை மிகக் குறைந்த பொருட்செலவில் சுமார் 200,000 மலேசிய ரிங்கிட் மதிப்பில் தான் உருவாக்கியுள்ளோம். ஆனால் அந்த செலவுக்குள் படத்தை முடிக்க எங்கள் குழுவினரின் ஒத்துழைப்பும், சரியான திட்டமும் தான் காரணமாக இருந்தது. இதுவரையில் மலேசிய நடிகர்கள் யாரும் இவ்வளவு தடவைகள் ஒத்திகை பார்த்திருக்கமாட்டார்கள். சுமார் இரண்டு மாதங்கள் ஒத்திகை மட்டுமே செய்து பார்த்தோம். இந்த படத்தில் இரண்டு பேர் சம்பந்தன் கதாப்பாத்திரம் செய்திருக்கிறார்கள். இளம் வயது சம்பந்தனாக கிஷோர் குமாரும், முதுமை வயது சம்பந்தனாக விக்னேஸ்வரனும் மிக அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.”

“சம்பந்தனின் அம்மா கதாப்பாத்திரத்தை ஏகவள்ளி அவர்கள் செய்திருக்கிறார்கள். இதுவரை ஏகவள்ளியை நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் தான் மலேசிய மக்கள் பார்த்திருப்பார்கள். ஆனால் இந்த படத்தில் சம்பந்தனின் அம்மாக மிக அழகாக நடித்திருக்கிறார். இது அரசாங்கம் நிதி உதவி செய்து எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் என்பதையும் நான் இங்கு கூறிக்கொள்கிறேன். ஃபினாஸ் (FINAS) தான் இதற்கு நிதி வழங்கியது” என்று எஸ்.டி.பாலா தெரிவித்தார்.

படத்திற்கு வந்திருக்கும் சிக்கல்

இவ்வளவு கடின உழைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 28 -ம் தேதி நாடெங்கிலும் 19 திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், உள்ளூர் தொலைக்காட்சியான ஆஸ்ட்ரோ வரும் ஆகஸ்ட் 31 -ம் தேதி, மெர்டேக்கா அன்று, இந்த திரைப்படத்தை வெளியிடப் போவதாக ஓர் அதிர்ச்சியான செய்தியை எஸ்.டி.பாலா அறிவித்தார்.

“திரையரங்கில் இந்த படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் போதே ஆட்ஸ்ரோவிலும் இதை வெளியிடப்போகிறார்கள். அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் படத்தை வெளியிட்ட பிறகே என்னால் அது பற்றி கருத்தோ அல்லது நடவடிக்கையோ எடுக்க முடியும். நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால் இது மலேசிய மக்களின் படம். இந்த திரைப்படத்தை ஒவ்வொருவரும் திரையரங்கில் சென்று பார்க்க வேண்டும்.” என்று எஸ்.டி.பாலா கேட்டுக்கொண்டார்.

மேலும், இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் படம் என்று நினைத்துவிட வேண்டாம். இது சம்பந்தன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கூறும் ஒரு அழகான படம் என்றும் எஸ்.டி.பாலா விளக்கமளித்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய படத்தின் உதவி இயக்குநர் ரோனிக்காவும், “சம்பந்தன் அவர்கள் ம.இ.கா கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் மற்றவர்கள் இதை பார்க்க கூடாது அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. இது அரசியல் படம் அல்ல. இது ஒரு தலைவரின் வாழ்க்கை வரலாறு. இதை அனைவரும் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

எத்தனையோ பொழுதுபோக்கு படங்கள் இருக்கையில், வீ.தி துன் சம்பந்தன் என்ற மாமனிதரின் வாழ்க்கை வரலாற்று படமாக எடுத்துக் காட்ட நினைத்த இயக்குநர் எஸ்.டி.பாலா அவர்களின் முயற்சிக்கு செல்லியலின் சார்பாக வாழ்த்துகள்! 

மலேசிய மக்கள் இந்த திரைப்படத்தை திரையரங்கில் சென்று பார்த்து, மாபெரும் வெற்றியடையச் செய்யும் பட்சத்தில், எதிர்காலத்தில் நிச்சயம் இது போன்ற நல்ல தரமான திரைப்படங்கள் உருவாகி, மலேசிய திரையுலகம் இந்த உலகம் வியக்க மாபெரும் வளர்ச்சியடையும் என்பது மறுக்க முடியாத உண்மை!

– ஃபீனிக்ஸ்தாசன்