நியூயார்க், ஆகஸ்ட் 23 – காசா பகுதியின் மீது இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதலில் இதுவரை 496 குழந்தைகள் பலியாகி உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆட்சி செய்து வந்த ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் இராணுவம் கடந்த ஒரு மாத காலமாக தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் மட்டுமின்றி அப்பாவி பொது மக்களும் பலியாகி வருகின்றனர். அவர்களின் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகி உள்ளன.
இதுவரை அங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அவர்களில் 496 பேர் குழந்தைகள் என்பது உலகை உலுக்கும் அதிர்ச்சி செய்தியாகும். இதுபற்றி ‘யுனிசெஃப்’ (UNICEF) நிறுவனத்தின் காசா பகுதிக்கான தலைவர் பெர்னில் அயர்ன்சைடு கூறுகையில்,
“காசாவின் கொடூரத்தாக்குதல் குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை. இதுவரை 496 குழந்தைகள் பலியாகி உள்ளனர். இது மிகவும் துரதிஷ்டவசமானது” “போர் நிறுத்த அறிவிப்பு முடிந்தவுடன் காசா மீது மீண்டும் இஸ்ரேல் தாக்கு தலைத் தொடங்கியது.
இதன் காரணமாக கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 25–க்கும் மேற்பட்டோர் அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 9–க்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்பது பொறுத்துக்கொள்ள முடியாத துயரமாகும்” என்று கூறியுள்ளார்.