கோலாலம்பூர், ஆகஸ்ட் 23 – உலகத் தலைவர்களே பிரதமர் நஜிப்பின் செயல்பாட்டை பாராட்டி இருப்பதாக கூறியுள்ள முன்னாள் துணையமைச்சர் டத்தோ முருகையா, பிரதமர் நஜிப் எந்த விஷயத்திலும் தீர்க்கமான முடிவை எடுத்துச் செயல்படக்கூடியவர் என்றும், அவரது செயல்பாட்டை விமர்சிப்பது அபத்தமான செயல் என்றும் கூறியுள்ளார்.
பத்திரிக்கைகளுக்கு வெளியிட்ட அறிக்கையில் முருகையா மேலும் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:-
“அண்மையில் உக்ரைனில் மலேசிய விமானம் பேரிடரை எதிர்கொண்ட சம்பவத்தில், அந்த விமானத்தின் கருப்புப் பெட்டியையும், மலேசிய பயணிகளின் சடலங்களையும் மீட்க பிரதமர் நஜிப் மேற்கொண்ட சாமர்த்தியமான, ராஜ தந்திர ரீதியிலான நடவடிக்கைகளை யாவரும் அறிவர். நெருக்கடியான தருணத்தில் பிரதமர் மேற்கொண்ட இந்த அணுகுமுறை உலகத் தலைவர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டுள்ளது”
“ஆனால் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கூறியுள்ள கருத்துக்கள் ஆச்சரியத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகின்றன. முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் நஜிப் தாமதமாக நடவடிக்கை எடுக்கிறார் அல்லது மௌனம் காக்கிறார் என்று துன் மகாதீர் கூறியுள்ளதை, பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவ பண்புகள் குறித்து நன்கறிந்த யாரும் ஏற்க மாட்டார்கள்.”
ஒத்துழைப்பு கொடுக்கும் நஜிப்பின் விசுவாசம்
பிரதமர் நஜிப்பின் கீழ் அவரது பிரதமர் இலாகாவில் துணையமைச்சராகப் பணியாற்றியவர் என்ற முறையில் முருகையா தனது பத்திரிக்கை அறிக்கையில் “நாட்டின் முந்தைய பிரதமர்களின் தலைமைத்துவத்திற்கு மிகச் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்தவர் பிரதமர் நஜிப்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தலைமைத்துவத்திற்கு விசுவாசமாக இருப்பதிலும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக பிரதமர் நஜிப் விளங்குவதாக முருகையா தெரிவித்துள்ளார்.
“துன் மகாதீர் இந்நாட்டின் பிரதமராக சிறப்பாகச் செயல்பட்டுள்ளார் என்பதையும், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த கடுமையாக உழைத்தார் என்பதையும் யாரும் மறந்துவிடவில்லை. அதேவேளையில் மலாய்க்காரர்கள் அல்லாத மற்ற இனத்தவர்களின் நலன்களை அவர் புறக்கணித்தார் என்பதே வரலாற்றின் நிதர்சனம். அதனால் உருவான அதிருப்தியை தேசிய முன்னணி மகாதீரின் தலைமைத்துவத்திற்குப் பின்னர் எதிர்கொள்ள நேரிட்டது என்பதும் அவரால் மறுக்க இயலாத உண்மை.”
“ஆனால் மூவின மக்களுக்கும் பொதுவான தலைமைத்துவத்தை வழங்கி வருகிறார் பிரதமர் நஜிப். எப்போதும் குறைபாடு பாடக்கூடிய சில சந்தர்ப்பவாதிகளும் கூட, அவரது தலைமைத்துவப் பண்புகளைப் பாராட்டுகிறார்கள். மூவின மக்களும் மெச்சுகிறார்கள்,” என்று முருகையா கூறியுள்ளார்.
மகாதீருக்கு அழகல்ல
நாடு இரு பேரிடர்களை சந்தித்துள்ள நிலையில், நாட்டின் தலைமைத்துவம் குறித்து தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்பது, நாட்டை முன்பு வழிநடத்திச் சென்ற ஒருவருக்கு அழகல்ல என்றும் டத்தோ முருகையா தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா படாவி பதவியில் இருந்து விலகியபோது அளித்த வாக்குறுதியின்படி இதுவரை அரசாங்க செயல்பாடுகளில் தலையிட்டதில்லை என்று சுட்டிக்காட்டி உள்ள முருகையா, இன்றுவரை பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவத்திற்கும் துன் படாவி குறைவில்லா ஆதரவை வழங்கி வருவதாகக் கூறியுள்ளார்.
“முன்பு சமூக வலைத் தளங்கள் ஏதும் இல்லை. அதேசமயம் முந்தைய தலைமைத்துவம், ஆட்சி குறித்த வெளிப்படையான விமர்சனங்களை அனுமதித்ததில்லை எனும் குற்றம்சாட்டும் உண்டு. ஆனால் பிரதமர் நஜிப் அனைத்துவிதமான விமர்சனங்களையும் தைரியமாக, தயக்கமின்றி எதிர்கொண்டு வரவேற்கிறார். அவை அனைத்திற்கும் தனது செயல்பாடுகளால் சாட்டையடி பதில்களைக் கொடுக்கிறார்.
இத்தகைய சிறந்த தலைமைத்துவத்திற்குப் பக்கபலமாக இல்லாவிட்டாலும், பிரதமரின் கரங்களை வலுப்படுத்தாவிட்டாலும், தேவையற்ற, அபத்தமான விமர்சனங்களையும் தவிர்ப்பது நல்லது. வரலாற்றில் பொய்யுரைகள் நிலைத்ததில்லை. பிரதமர் நஜிப்பின் செயல்பாட்டை நாளைய வரலாறும் நிச்சயம் பாராட்டும்,” என்றும் டத்தோ முருகையா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.