ஈப்போ, ஆகஸ்ட் 24 – ஏறத்தாழ நான்கு மாதங்களுக்குப் பின்னர், இன்று நடைபெற்ற ம.இ.காவின் மத்திய செயலவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் கட்சியின் தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தவிர்த்துவிட்டார்.
அவருக்குப் பதிலாக கட்சியின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் மத்திய செயலவைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
மஇகா வரலாற்றில், ஒரு தேசியத் தலைவர் மத்திய செயலவைக்கான கூட்டத்தைக் கூட்டிவிட்டு, பிறகு முறையான காரணமின்றி, கலந்து கொள்ளாமல் தவிர்ப்பது இதுவே முதன் முறை எனக் கருதப்படுகின்றது.
பேராக் மாநிலப் பேராளர்களின் கண்டனங்கள்
ஆகக் கடைசியான மஇகா மத்திய செயலவைக் கூட்டம் கடந்த மே மாதம் நடைபெற்றது. அதன்பின்னர் ஓரிரு முறை தேதி குறிக்கப்பட்ட பின்னர் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இன்று, ஈப்போவில் மஇகாவின் மத்திய செயலவைக் கூட்டம் பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெறும் என மத்திய செயலவை உறுப்பினர்களுக்கு முன் அறிவிப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
அதற்கு முன்பாக காலை 10.00 மணிக்கு பேராக் மாநில ஆண்டுப் பேராளர் மாநாடு நடைபெற்றது. பழனிவேலுவும் கலந்து கொண்ட இந்த மாநாட்டின் திறப்பு விழாவில் மாநில மந்திரி பெசார் சம்ரியும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அதன் பின்னர், பேராளர் மாநாட்டில் கலந்து கொண்ட பேராக் மாநிலப் பேராளர்கள் செனட்டர்கள் நியமனம் குறித்து, தேசியத் தலைவரை கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தனர்.
பேராக் மாநிலத்திற்கான செனட்டர்கள் என்னவாயிற்று என அவர்கள் தேசியத் தலைவரைப் பார்த்து ஆத்திரத்துடன் கேள்விகள் கேட்டனர்.
பேராக் மாநிலத்திற்கென இரண்டு செனட்டர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்து வந்தது.
காரசாரமான மத்திய செயலவை
இதனைத் தொடர்ந்து மஇகாவின் மத்திய செயலவைக் கூட்டமும் காரசாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இடைப்பட்ட நான்கு மாத காலத்தில் மத்திய செயலவைக் கூட்டம் எதுவும் நடைபெறாத காரணத்தால், பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க மத்திய செயலவை உறுப்பினர்கள் காத்திருந்தனர்.
குறிப்பாக, செனட்டர்கள் நியமனம் குறித்தும் காரசாரமான விவாதங்களை நடத்த, கேள்விகளை எழுப்ப உறுப்பினர்கள் தயாராகி வந்தனர்.
ஆனால், அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வகையில் எல்லாப் பிரச்சனைகளிலிருந்தும், கேள்விக் கணைகளிலிருந்தும் தப்பிக்கும் வண்ணம், மத்திய செயலவைக் கூட்டத்திற்கே வராமல் பழனிவேல் தவிர்த்து விட்டார்.
ஈப்போவில் பேராக் மாநிலப் பேராளர் மாநாட்டில் கிடைத்த எதிர்ப்புக் குரல்களைக் கண்டு மிரண்டுபோன பழனிவேல், மத்திய செயலவையிலும் பூகம்பம் வெடிக்கும் என்ற காரணத்தால், ஈப்போவில் இருந்தாலும், மத்திய செயலவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல், கூட்டத்தை துணைத் தலைவர் டாக்டர் சுப்ரமணியத்தைத் தலைமை தாங்கும்படி கூறிவிட்டு சென்று விட்டார்.
இதனால், பல மத்திய செயலவை உறுப்பினர்கள், தாங்கள் எழுப்ப வேண்டிய பிரச்சனைகளை இன்று மத்திய செயலவையில் எழுப்ப முடியாமல் போனது என மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.
குறிப்பாக, செனட்டர்கள் விவகாரம் எழுந்தபோது, மத்திய செயலவைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய டாக்டர் சுப்ரமணியம் இதற்கு தேசியத் தலைவர்தான் பதில் கூற வேண்டும் என்று நழுவி விட்டாராம்.
இவ்வாறாக, இன்றைய மத்திய செயலைவயில் பூகம்பம் வெடிக்கும் – புயல் மழையோடு சூறாவளி வீசப்போகின்றது எனப் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க –
இன்றைய கூட்டம் இறுதியில் பிசுபிசுத்துப் போனது – தேசியத் தலைவரே சாமர்த்தியமாக கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டதால்!