கோலாலம்பூர், ஆகஸ்ட் 25 – ஆப்பிள் நிறுவனம் ஐபோன் மூலமாக வாகனங்களை பயனர்கள் நிறுத்தி வைத்திருக்கும் இடத்தை தானாகவே அறிந்து கொள்ளும் செயலியை உருவாக்க இருக்கிறது.
இதற்கான காப்புரிமை கடந்த வியாழக்கிழமை பெற்ற ஆப்பிள், விரைவில் அதனை செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்தினை ‘ஜிபிஎஸ்’ (GPS) சமிக்ஞைகள் இல்லாமலே கண்டறியும் இந்த புதிய செயலியின் உயர் மட்ட செயல்பாட்டை ஐஒஎஸ்-ன் இணைக்க ஆப்பிள் முயற்சி செய்து வருகின்றது.
பயனர்கள் வாகனங்களை நிறுத்திய இடத்தை தானாகவே நினைவில் கொள்ளும் இந்த செயலி, பின்னர் பயனர்களின் தேவைகேற்ப வழிகாட்டுகிறது.
இந்த செயலியானது பயனர்கள் கார்களை நிறுத்தி கதவுகளை மூடும் பொழுதில் இருந்து செயல்பட ஆரம்பிக்கிறது. அதன் பின்னர் பயனர்கள் நடந்து செல்லும் இடங்களை கணக்கிட்டு, அவர்களின் கார் எங்கு நிறுத்தப்பட்டு இருக்கிறது என பயனர்களுக்கு தேவையான பொழுது வழிகாட்டுகிறது.
இந்த பயன்பாட்டினை காரில் உள்ள ஜிபிஎஸ் சமிக்ஞைகளை பயன்படுத்தியும் இயக்க முடியும், ஜிபிஎஸ் சமிக்ஞைகள் இல்லாத பொழுது ‘ப்ளூடூத்’ மூலமாக காருக்கும் ஐபோனுக்குமான முதற்கட்ட இணைப்பு நடைபெறுகின்றது.
கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் இடத்தினை அறிந்து கொள்ளும் இந்த வசதி முன்பே, கார்களுக்கான ஆப்பிளின் ‘சிரி’ (siri) செயலியின் மூலமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் அந்த வசதி ஆடம்பரக் கார்களுக்கு மட்டுமே சாத்தியமானதாக உள்ளது. அதனால் ஆப்பிள் அனைத்து விதாமான புதிய ரக கார்களிலும் பயன்படும் படி இந்த புதிய செயலியை உருவாக்க இருப்பதாகக் கூறப்படுகின்றது.