Home அவசியம் படிக்க வேண்டியவை பழனிவேல் பதவி விலகக் கோரி டி.மோகன் போர்க்கொடி! ‘கேப்’(GAP) ஆரம்பமா?

பழனிவேல் பதவி விலகக் கோரி டி.மோகன் போர்க்கொடி! ‘கேப்’(GAP) ஆரம்பமா?

547
0
SHARE
Ad

Dato T.Mohan former Youth leaderகோலாலம்பூர், ஆகஸ்ட் 28 – 2010ஆம் ஆண்டில் டத்தோஸ்ரீ சாமிவேலு பதவி மஇகா தேசியத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது கேஸ் (GAS) என்ற அமைப்பு.

“கெராக்கான் எண்டி சாமிவேலு” (Gerakan Anti-Samy Vellu) என்ற பெயருடன் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒரு சிலர் தொடங்கிய இந்த அமைப்பு பின்னர் ஆயிரக்கணக்கானோர் சேர்ந்து கொள்ள கண்டனக் கூட்டங்களையும் நடத்தி, சாமிவேலு பதவி விலக நெருக்குதல் அளிக்கத் தொடங்கியது.

பழனிவேல் தேசியத் தலைவராக வருவதற்கு இந்த கேஸ் அமைப்புதான் பின்னணியில் செயல்பட்டது.

#TamilSchoolmychoice

கேப் இயக்கம் ஆரம்பமா?

அதே போன்று இப்போது பழனிவேல் பதவி விலக நெருக்குதல் அளிக்கும் அமைப்பு ஒன்று கேப்(Gerakan Anti-Palanivel) என்ற பெயரில் தொடங்கப்பட உள்ளதாக மஇகா வட்டாரங்கள் கோடி காட்டியுள்ளன.

அதற்கு முன்னோட்டமாக, மஇகாவின் முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் டி.மோகன், எல்லாவற்றிலும் தாமதம், மெத்தனம் என செயல்படும் பழனிவேல் உடனடியாக பதவி விலகி கட்சியில் மற்றொரு பொருத்தமான தலைமைத்துவம் அமைவதற்கு வழி விட வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார்.

கேப் அமைப்புக்கு முன்னோடியாக டி.மோகனின் இந்த அறிவிப்பு அமைகின்றது என்றும் இனி அடுத்த கட்டம் பழனிவேல் பதவி விலக நெருக்குதல் அளிப்பதுதான் என்றும் மஇகா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது.

செனட்டர் நியமனங்களில் ஆண்டுக் கணக்கில் தாமதம், மத்திய செயலவைக் கூட்டத்திற்கு தலைமை தாங்க துணிவின்மை, பேராக் மாநில பேராளர் மாநாட்டுக் குழப்படிகள், – இப்படி பல்வேறு காரணங்களை தனது பத்திரிக்கை அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ள மோகன் இதனால் பழனிவேல் தனது கட்சிப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதே நல்லது என கடுமையாகச் சாடியுள்ளார்.

மோகன் தலைமையில் ‘கேப்’ இயக்கமா?

அமையவிருக்கும் கேப் இயக்கத்திற்கு மோகனே பொறுப்பேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கூடிய விரைவில் மஇகாவின் மேலும் சில முக்கிய தலைவர்களும் இந்த இயக்கத்தில் இணைந்து கொண்டு பழனிவேல் பதவி விலகிச் செல்ல நெருக்குதல் அளிப்பார்கள் என்று கட்சி வட்டாரங்களில் தற்போது பேசப்பட்டு வருகின்றது.

இன்னும் ஒரு தவணைதான் பதவியில் இருப்பேன் என்றும் எதிர்வரும் மார்ச் 2016க்குள் பதவி விலகுவேன் என்றும் பழனிவேல் ஏற்கனவே அறிவித்திருந்தாலும், அவரது தலைமைத்துவத்திற்கு நாடெங்கிலும் கட்சியிலிருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றது.

எதிர்வரும் டிசம்பருக்குள் அவர் பதவி விலகிச் செல்ல வேண்டும் என்ற நெருக்குதலை கேப் இயக்கம் விரைவில் தொடங்கும் என்ற ஆரூடங்களும் நிலவுகின்றன.

அவ்வாறு பழனிவேல் கட்சித் தலைமைப் பொறுப்பை விட்டுக் கொடுத்தால், தேசியத் துணைத் தலைவராக இருக்கும் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் மஇகா சட்டவிதிகளின் படி இடைக்கால தேசியத் தலைவராகப் பொறுப்பேற்பார்.