கோலாலம்பூர், ஆகஸ்ட் 29 – எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தில் தந்தையின் சாவிற்கு தானே காரணமாகி விட்டோமே என்று குற்ற உணர்ச்சியோடு வாழ்ந்து வரும் அதர்வாவின் (பிருத்விராஜ்) வாழ்வில், வறண்ட நேரத்தில் திடீரென தோன்றும் அடைமழையாக வருகிறார் சம்யுக்தா (பிரியா ஆனந்த்).
பாண்டிச்சேரியில் பிட்சா கடை ஒன்றில் பகுதி நேர வேலை செய்து கொண்டே கல்லூரியிலும் படித்துக் கொண்டிருக்கும் ஆதர்வா, பிரியா ஆனந்துடனான முதல் சந்திப்பிலேயே காதலில் விழுந்து விடுகிறார். ஆனாலும் அதை மனதிற்குள்ளேயே மறைத்து வைத்துக் கொண்டு பிரியா ஆனந்துடன் ஒரு நல்ல நண்பராகப் பழகுகிறார்.
பிரியா ஆனந்த் விரும்பியதால் அவருக்குப் பிடித்தமான விலையுயர்ந்த சூப்பர் பைக்கை வாங்கி, பின்னால் உட்கார வைத்து கிழக்கு கடற்கரை சாலையில் ஓட்டிச் செல்கிறார். அந்த சந்தோஷமான சூழ்நிலையில் பிரியா ஆனந்திடம் தனது காதலை வெளிப்படுத்துகிறார்.
ஆனால் தான் நட்பாக மட்டுமே பழகினேன் என்று பிரியா ஆனந்த் கூறிவிட, கோபத்துடன் இருவரும் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டு இருக்கையில், ஆறேழு பேர் சூப்பர் பைக்கில் வந்து ஆதர்வாவை அடித்துப் போட்டு பிரியா ஆனந்தை கடத்திக் கொண்டு போய் விடுகிறார்கள்.
இது தான் ‘இரும்பு குதிரை’ படத்தின் முன்பாதி கதை.
பிரியா ஆனந்த் எதற்காக கடத்தப்படுகின்றார்? அந்த கும்பலுக்கும் அதர்வாவிற்கும் என்ன தொடர்பு? போன்ற கேள்விகளுகளுக்கு பின்பாதி கதையில் பல திருப்பங்களுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் யுவராஜ் போஸ்.
இந்த படத்திற்கு குருதேவ் கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். தாமரை, பா.விஜய் ஆகியோர் பாடல் வரிகள் எழுதியிருக்கின்றனர்.
நடிப்பு
அதர்வாவின் அம்மாவாக தேவதர்ஷினி மிக அருமையாக நடித்திருக்கிறார். பல காட்சிகளில் கலகலப்பையும், இறந்து போன தனது கணவரை நினைவு கூறும் நேரங்களில் சோகத்தையும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதர்வாவின் அப்பா கதாப்பாத்திரத்திற்கு மறைந்த நடிகர் ரகுவரனின் புகைப்படத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான ரகுவரன் இறந்தும் வாழ்கிறார்.
இறந்து போன தன் மகனையே நினைத்து பித்துப் பிடித்தவர் போல் பேசும் கதாப்பாத்திரத்தில் பழம்பெரும் நடிகை சச்சு நடித்திருக்கிறார். மயில்சாமியுடன் அவர் பேசும் காட்சிகள் நகைச்சுவையாக இருந்தாலும், நிஜத்தில் ஒரு தாயின் துயரத்தை பிரதிபலிக்கிறது.
அதர்வாவின் நண்பர்களாக ஜெகன் மற்றும் ராய் லக்ஷ்மி சிறந்த தேர்வு. பைக் விற்பனை செய்யும் கடையின் உரிமையாளராக ராய் லக்ஷ்மி படு கவர்ச்சியாக நடித்திருக்கிறார். உடம்பெல்லாம் பச்சை குத்திக்கொண்டு, அரை குறை ஆடையுடன் மார்டன் பெண்ணாக வலம் வந்திருப்பது அவரது இரசிகர்களுக்கு இன்ப விருந்து.
இவர்களைத் தவிர கதையில் இன்னொரு மிக முக்கியமான கதாப்பாத்திரம் ‘ஏழாம் அறிவு’ வில்லன் டாங் லீ. வெறி பிடித்த பைக் ரேசர் கதாப்பாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். பின்பாதியில் அவர் வந்த பின்பு தான் கதையில் விறுவிறுப்பு எகிறுகிறது.
ஆதர்வா உடம்பை கட்டுமஸ்தாக வைத்திருப்பதெல்லாம் சரி தான். ஆனால் வசன உச்சரிப்பிலும், முக பாவனைகளிலும் உள்ள குழந்தைத் தனத்தை மாற்ற வேண்டும். கதாநாயகனுக்கே உரிய மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகளில் ஆதர்வா நடிப்பில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பிரியா ஆனந்த் படத்திற்கு இன்னொரு பலம். காதல் காட்சிகளில் பிரியா ஆனந்தின் பளீச் முகமும், வசீகர புன்னகையும் பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கிறது.
ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை
‘இரும்பு குதிரை’ படத்தில் குருதேவ் கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கிறது. பாண்டிச்சேரியிலும், கேரளாவிலும் எடுக்கப்பட்டுள்ள காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டது போல் அப்படி ஒரு நவீனமயமான தோற்றத்தை காட்டுகின்றது.
அதிலும் குறிப்பாக கடைசி அரை மணி நேர பைக் ரேஸ் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.
ஜி.வி பிரகாஷ் பின்னணி இசை ரேஸ் காட்சிகளில் திரையரங்கை அதிரச் செய்கின்றது. “அங்கே இப்போ என்ன செய்கிறாய்” பாடல் மட்டுமே மனதில் பதிகின்றது. ராய் லஷ்மி ஆடும் கவர்ச்சி குத்தாட்டம், வில்லன் டாங் லீ அறிமுகமாகும் போதும் வரும் கவர்ச்சி ஆட்டம் போன்றவை எதற்காக வைக்கப்பட்டிருக்கின்றன என்றெல்லாம் ஆராயவே தேவையில்லை. அது அக்மார்க் கவர்ச்சி ரசிகர்களுக்கான விருந்தோம்பல்.
ரசிக்க முடியாமல் போனவை
அதர்வாவின் குழந்தைத் தனமான முகபாவனைகளும், வசன உச்சரிப்பும் ஒரு திறமையான, தனித்துவம் வாய்ந்த, மிரட்டலான, தைரியம் நிறைந்த பைக் ரேஸர் கதாப்பாத்திரத்திற்கு பொருந்தவில்லை என்று தான் கூற வேண்டும்.
அது மட்டுமின்றி, அவர் ஒரு திறமையான பைக் ரேஸர் என்பதற்கான அழுத்தமான பிளாஷ் பேக் காட்சிகள் ஏதும் இல்லாததால், படத்தின் இறுதியில் திரைக்கதையில் இயக்குநர் வைத்திருக்கும் திருப்பம் திருப்தி அளிக்கவில்லை.
முதல் பாதியில் கவர்ச்சிப் பாடல்களையும், பிட்சா கடையில் மனோபாலா, லொல்லு சபா சுவாமிநாதன் போன்றவர்களின் காட்சிகளையும் தவிர்த்து, அதற்குப் பதிலாக அதர்வாவிற்கு ஏற்பட்ட விபத்தையும், அதனால் அவருக்கு ஏற்படும் குற்ற உணர்வுகளை அவர் வெளிப்படுத்தும் காட்சிகளையும் இன்னும் அழுத்தமாக, சஷ்பென்ஸ் காட்சிகளுடன் காட்டியிருக்கலாம்.
பைக் ரேஸ் என்ற புதுமையான கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் சொதப்பலான திரைக்கதையால் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டு வர இந்த படம் தவறி விட்டது என்றே கூற வேண்டும்.
மொத்தத்தில் பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் படம் பார்க்கப் போனால், அழகான பாண்டிச்சேரியையும், கவர்ச்சி லஷ்மி ராயையும், வசீகரமான புன்னகையுடன் படம் முழுவதும் வலம் வரும் பிரியா ஆனந்தையும், கடைசி அரை மணி நேரங்கள் விறுவிறுப்பான மோட்டார் பந்தையத்தையும் ரசித்துவிட்டு வரலாம்.
– ஃபீனிக்ஸ்தாசன்
இரும்பு குதிரை படத்தின் முன்னோட்டம்:-