Home நாடு மஇகா செனட்டர்களை 2வது தவணைக்கு நீட்டிக்க பழனிவேலுவே முடிவு –  பிரதமர் தலையிடவில்லை

மஇகா செனட்டர்களை 2வது தவணைக்கு நீட்டிக்க பழனிவேலுவே முடிவு –  பிரதமர் தலையிடவில்லை

526
0
SHARE
Ad

Palanivel-and-MICபுத்ரா ஜெயா, ஆகஸ்ட் 29 – மஇகாவின் இரண்டு செனட்டர்களை இரண்டாவது தவணைக்கு நீட்டிக்க வேண்டும் என்று பிரதமர் தன்னைக் கேட்டுக் கொண்டதாகவும், அதற்கேற்பவே அவர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் நெருக்குதல் தனக்கு ஏற்பட்டதென்றும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் கூறியுள்ளதாக, சில நாட்களாக, தமிழ் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து இன்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையொன்றில், மஇகாவின் முடிவில் பிரதமர் தலையிடவில்லை என அறிவித்தது.

“மூன்று ஆண்டுகள் மேலவை உறுப்பினருக்கான பதவிக் காலம் முடிவடையும் தருவாயில் இருந்த மஇகாவின் இரண்டு தலைவர்களின் நிலை குறித்து பழனிவேல் பிரதமரிடம் கலந்துரையாடினார். அவ்விருவரையும் இரண்டாம் தவணைக்கு மேலவை உறுப்பினர்களாக நியமிக்குமாறும் (பழனிவேல்) கோரிக்கை விடுத்தார்” என அந்த செய்திக் குறிப்பு தெரிவித்தது.

#TamilSchoolmychoice

“அதற்குப் பிரதமர், அம்னோ உட்பட தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகள் அனைத்தும் இரு தவணைகளுக்கே மேலவை உறுப்பினர் பதவியை ஏற்று வருகின்றன. ஆதலால், சம்பந்தப்பட்ட இருவரின் பதவிக் காலம் நீட்டிக்கும் முடிவை மஇகாவிடமே விட்டு விடுகின்றேன் என்று கூறினார்” என்றும் பிரதமரின் பத்திரிக்கை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மேலவை உறுப்பினர் பதவி ஒரு தவணைக்கு மட்டுமே வழங்கப்படும் என்று மஇகாவின் மத்திய செயலவை இதற்கு முன்பு முடிவு செய்திருந்தால், சம்பந்தப்பட்ட இருவரின் பதவிக் காலத்தை நீட்டிப்பது குறித்து தான் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்று பிரதமர் தெரிவித்திருந்தார்” என்றும் அந்த பத்திரிக்கை அறிக்கை சுட்டிக் காட்டியது.

இவ்விவகாரம் தொடர்பில் முடிவு எடுக்கும் சுதந்திரத்தை பிரதமர் மஇகாவிடமே வழங்கி விட்டார் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.