புதுடெல்லி, செப்டம்பர் 02 – ஆசியாவில் சீனாவிற்கு இணையாக அனைத்துத் துறைகளிலும் தனது ஆதிக்கைத்தை செலுத்த இந்தியா தயாராகி வருகின்றது. இதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் அரசுடன் சமீபத்தில் ஏற்படுத்திக் கொண்ட வர்த்தகம் மற்றும் முதலீட்டு ரீதியிலான ஒப்பத்தம் வரலாற்று சிறப்பு மிக்கதாகக் கருதப்படுகின்றது.
(ஜப்பான் பிரதமர் சின்சோ அபே உடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டின் பாரம்பரிய உணவை சுவைக்கிறார்)
இந்தியாவில் சிறந்த நகரங்களை உருவாக்க அரசு ‘ஸ்மார்ட் சிட்டி‘ (Smart City) என்றொரு திட்டத்தை செயல்படுத்த தீர்மானித்துள்ளது. இதற்கான முதலீடுகள் அனைத்தையும் ஜப்பான் ஏற்றுக் கொள்வதாக ஒப்புக்கொண்டுள்ளது. அதேபோல் நகரங்களுக்கான அதிவேக ரயில் சேவை, உள்கட்டமைப்பை மேம்பாடு, மெட்ரோ ரயில் சேவை உட்பட பல்வேறு பணிகளையும் மேம்படுத்த இந்தியா, ஜப்பான் அரசுடன் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக ஜப்பான் அரசு இந்தியாவில் சுமார் 35 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஜப்பான் பிரதமர் சின்சோ அபே, மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இதனைத் தொடர்ந்து இரு நாட்டு பிரதமர்களும் கூட்டு உரையாற்றினார். அப்போது பேசிய ஜப்பான் பிரதமர் அபே, “இந்தியப் பிரதமர் மோடி எனது பழைய நண்பர். அவருடனான நட்பு இந்தியாவுடனான உறவை பலப்படுத்த உதவுகின்றது. அவருடைய வருகையால் இரு நாடுகளுடனான உறவு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவுடன் பாதுகாப்பு உட்பட பல்வேறு விவகாரங்களில் இணைந்து செயல்படத் தயாராக உள்ளோம்” என்று கூறியுள்ளார்.
இதைதொடர்ந்து பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகிய உள்ள நிலையில், ஜப்பானுக்கு வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது. இந்தியாவின் வளர்ச்சியில் ஜப்பானின் பங்கு மிக முக்கியம். ஜப்பானுடனான நட்பிற்கு இந்தியா எப்பொழுதும் முன்னுரிமை கொடுத்து வருகின்றது” என்று கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் ஜப்பான் கூட்டாக ஏற்படுத்தி உள்ள ஒப்பந்தம் இந்தியாவின் வளர்ச்சியையும், ஆசியாவின் வர்த்தகத்தையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று கூறப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.