இஸ்லாமாபாத், செப்டம்பர் 4 – பாகிஸ்தானில் கடும் அரசியல் நெருக்கடிக்கு ஆளாகி உள்ள பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நவாஸ் ஷெரீப் பதவி விலக வலியுறுத்தி கடும் நெருக்கடி கொடுத்துவரும் இம்ரான் கான் மற்றும் காத்ரியின் ஆதரவாளர்கள் அவரின் வீடு உள்ளிட்ட முக்கிய இடங்களில் பெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இராணுவத் தளபதியும் ஷெரீப்பை பதவி விலக வலியுறுத்தியதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் அவசர கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டாம் என்று அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் ஷெரிப்பை பதவி விலக சொல்பவர்கள் அரசியல் உள்நோக்கத்திற்காக நாட்டில் கிளர்ச்சியை தூண்டிவிடுகின்றனர் என்று குற்றம்சாட்டி உள்ளனர். முக்கியமான நிகழ்வுகளின்போதோ அல்லது அவசரகால நிலைமைகளை சமாளிக்கவோ அங்கு இதுபோன்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டங்கள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.