கோலாலம்பூர், செப்டம்பர் 3 – நாட்டின் 57 -வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசியக் கொடியை களிமண்ணால் உருவாக்கிய ரவூப் தமிழ்ப்பள்ளி மாணவர்கள், அதை வெற்றிகரமான மலேசிய சாதனைப் புத்தகத்திலும் இடம்பெறச் செய்துள்ளனர்.
சுமார் மூன்று மாத காலம், ரவூப் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த கொடியை உருவாக்க கடும் முயற்சிகள் எடுத்துள்ளனர்.இந்த கொடி 8.2 மீட்டர் நீளம், 3.2 மீட்டர் அகலத்தில் களிமண்ணால் உருவாக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 29 -ம் தேதி, “சரித்திரம் படைப்போம் வாரீர்” என்ற கருப்பொருளில் நடத்தப்பட்ட இந்த விழாவில் கெடா மாநில அரச வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியர் டத்தோ டாக்டர் ஹசிசி இக்வான் இந்த தேசியக் கொடியை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
மேலும் இவ்விழாவில், பகாங் மாநில கல்விப் பிரிவின் உதவி இயக்குநர் டத்தோ ஹாஜி சமான் இட்ரிஸ், தமிழ் மொழிப் பிரிவு உதவி இயக்குநர் எம்.பூபாலன், ரவூப் கல்விப் பிரிவைச் சேர்ந்த அகமட் ஜாமில் ஹசான், ரவூப் மஇகா தொகுதித் தலைவர் தமிழ்ச் செல்வம், மலேசிய சாதனைப் புத்தகத்தை வழிநடத்தும் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
களிமண்ணால் தேசியக் கொடியை உருவாக்கும் இந்த முயற்சியில் சுமார் 266 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
அவர்களுக்கு அப்பள்ளியின் முன்னாள் துணைத் தலைமையாசிரியர் மற்றும் தற்போது பிரேசர் மலைத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியருமான பாலசுப்ரமணியம் வேலு, அப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் வீரநாதன் கோவிந்தன், நடப்பு தலைமையாசிரியர் தமிழ்வாணன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சரவணன் இராமச்சந்திரன் ஆகியோர் உறுதுணையாக இருந்துள்ளனர்.
இவ்விழா மாணவர்களின் ஆடல், பாடல் என மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மாணவர்களின் நடன நிகழ்ச்சிகளை ஸ்ரீஷா கங்காதரன் வழிநடத்தியுள்ளார்.
களிமண்ணால் செய்யப்பட்ட இந்த தேசியக் கொடி மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றதற்கான அங்கீகாரச் சான்றிதழும் இவ்விழாவில் பள்ளியின் தலைமையாசிரியரிடம் வழங்கப்பட்டது.