கோலாலம்பூர், செப்டம்பர் 4 – மலேசிய தமிழ்ச் சங்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் முதல் ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ் மொழி கவிதை வகுப்புக்களை நடத்தி வருகிறது.
கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில் உள்ள முத்தியாரா கொம்ப்ளெக்சில் உள்ள மலேசிய தமிழ்ச் சங்கத்தின் அலுவலகத்தில் இந்த வகுப்புகள் நடைபெறும்.
இதன் முதல் நிகழ்வாக கடந்த மாதம் சுதந்திர தின நாளான 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மலேசியத் தமிழ்ச் சங்கம் அரங்கத்தில் தமிழ் மொழி கவிதை வகுப்பு காலை 11.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை நடைபெற்றது.
இந்த வகுப்புக்களை தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் பிரபல கவிஞர் பாதாசன் நடத்துகிறார். இந்த வகுப்பில் கலந்துகொண்டு தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கியக் கூறுகளைப் பற்றியும், யாப்பு முறையில் கவிதைகளை எழுதும் யாப்பிலக்கணம் பற்றியும் தெளிவு பெறுமாறு தமிழ் ஆர்வலர்களை தமிழ்ச்சங்கம் கேட்டுக்கொள்கிறது.
முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இந்த தமிழ் மொழி கவிதை வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என ஆர்வமுள்ளவர்கள் அழைக்கப்படுகின்றார்கள்.
முக்கியமாக கோலாலம்பூரில் உள்ள இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள் சிரமம் பாராமல் தங்கள் மாணவர்களை இந்த வகுப்பில் கலந்துகொள்ள ஊக்குவிக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இடைநிலைப் பள்ளி இந்திய மாணவர்கள் மட்டுமின்றி கவிதை இலக்கணத்தை முறையாக கற்க விரும்புவோரும் இந்த வகுப்பில் கலந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு பாதாசன் 019-2401943 என்ற செல்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மலேசிய தமிழ்ச் சங்கம் தெரிவித்தது.