கோலாலம்பூர், செப்டம்பர் 4 – இந்த ஆண்டு அரசியல் விமர்சனம் காரணமாக கைது செய்யப்பட்டவர்களில் 9-வதாக தற்போது மலாயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் அஸ்மி சரோமும் சேர்ந்துள்ளார்.
அரசாங்கத்தின் கல்வித்திட்டம் குறித்து நாளிதழ் ஒன்று அவர் எழுதிய விமர்சனத்திற்காக, கடந்த செவ்வாய்கிழமை தேச நிந்தனைக் குற்றச்சாட்டில், காவல்துறை அஸ்மி சரோமை கைது செய்துள்ளது.
இதற்கு முன்பு, கடந்த பிப்ரவரி மாதம் அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக் கூறிய மறைந்த கர்பால் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
அதன் பின்னர், எதிர்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவாவின் மீது, கடந்த மார்ச் மாதம் இதே தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
கடந்த மே மாதம் சர்ச்சைக்குரிய காணொளி ஒன்றை வெளியிட்ட காரணத்தால் நாடாளுமன்ற உறுப்பினர் தெரேசா கோக் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
அண்மையில், அம்னோவை ‘செலாக்கா’ என்று வர்ணித்த குற்றத்திற்காக ஜசெக கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் கைது செய்யப்பட்டு, கடந்த வாரம் அவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.