Home படிக்க வேண்டும் 3 ஆனந்தகிருஷ்ணன் மீது குற்றப் பத்திரிகையா? சட்டபூர்வமாக மெக்சிஸ் எதிர்கொள்ளும்!

ஆனந்தகிருஷ்ணன் மீது குற்றப் பத்திரிகையா? சட்டபூர்வமாக மெக்சிஸ் எதிர்கொள்ளும்!

631
0
SHARE
Ad

Ananda Krishnanகோலாலம்பூர், செப்டம்பர் 5 – மெக்சிஸ் தொலைத் தொடர்பு நிறுவனரும், உரிமையாளரும், மலேசியாவில் இரண்டாவது பெரிய பணக்காரருமான  டான்ஸ்ரீ ஆனந்தகிருஷ்ணன் பல நாடுகளில், பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்தாலும் இதுவரை அவர் மீது வர்த்தக ரீதியிலான தவறுதலான குற்றங்களோ, குறைகளோ சுமத்தப்பட்டதில்லை.

ஆனால், இப்போது முதன் முறையாக இந்தியாவில் அவர் செய்த ஒரு முதலீடு சர்ச்சைக்குள்ளாகி, காவல் துறை விசாரணை, குற்றப் பத்திரிக்கை என்ற அளவுக்கு விசுவரூபம் எடுத்துள்ளது.

புதுடில்லியில் ஏர்செல் நிறுவனத்தில் மெக்சிஸ் செய்த முதலீடு தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கும் சூழ்நிலையில் இது தொடர்பாக கோலாலம்பூரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மெக்சிஸ் நிறுவனம், இந்த விவகாரத்தில் எந்த தவறும் நடக்கவில்லை என்றும், இதை சட்ட வழியாக எதிர்த்துப் போராடுவோம் என அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

maxisமெக்சிஸ் தொடர்பாக வெளிவந்துள்ள குற்றச்சாட்டுகளை எம்சிபி எனப்படும்  மெக்சிஸ் கொமின்கேஷன் பெர்ஹாட்   நிறுவனம், முற்றாக மறுத்ததுடன் அடிப்படையற்ற நிலையில் இந்தக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இந்தியாவின் மத்தியக் குற்றப் புலனாய்வுத் துறை அண்மையில் 9 பேருக்கு எதிராகக் தாக்கல் செய்திருந்த குற்றப் பத்திரிகையில் மெக்சிஸ் தலைவர் ஆனந்தகிருஷ்ணன் பெயரையும் சேர்த்திருந்தது.

இந்திய தகவல் தொடர்பு முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன்,சன் தொலைக்காட்சி நிறுவனத் தலைவர் கலாநிதி மாறன், மெக்சிஸ் தலைவர் ஆனந்தகிருஷ்ணன்,  எம்சிபி நிறுவன இயக்குநர் ரால்ப் மார்ஷல் உட்பட 9 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதாக இந்தியாவின் குற்றப் புலனாய்வு அமைப்பான சிபிஐ அறிவித்திருந்தது.

இதுவரை எந்தக் குற்றப்பத்திரிகை அறிக்கையும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றாலும், ஊடகத் தகவல்களை மையமாக வைத்து சிபிஐ தாக்கல் செய்துள்ள இந்த அறிக்கையை எம்சிபி நிறுவனம் முற்றாக மறுக்கிறது.

இதில் எந்த தவறும் நடக்கவில்லை. இதை சட்ட அடிப்படையில் எதிர்கொள்வோம். முழுமை பெறாத புலன் விசாரணையின் அடிப்படையில் சிபிஐ இந்தக் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறது. இவை அனைத்தும் அடிப்படையற்றவை என அந்த அறிக்கை கூறியதாகத் தெரிகிறது.