காபூல், செப்டம்பர் 5 – ஆப்கானிஸ்தானின் கஸ்னி பகுதியில் நேற்று தலீபான் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 18 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகின்றது.
அமெரிக்க இராணுவம் மற்றும் நேட்டோ துருப்புகள் கடும் போராட்டங்களை வெளிப்படுத்தி தலீபான்களை ஆப்கன் ஆட்சியில் இருந்து வெளியேற்றியது.
அங்கு ஜனநாயகம் வளர்ந்த பின்னர் அமெரிக்கா மற்றும் நேட்டோ துருப்புகள் தங்கள் படைகளை விலக்கிக்கொள்ளும் பணியைத் தொடங்கின.
இதனை பயன்படுத்திக் கொண்ட தலிபான்கள் ஆப்கனில் மீண்டும் தங்கள் ஆட்சியை நிறுவ, அங்கு கடும் தாக்குதல் நடத்தி வருகின்றன.
நேற்றும் தலிபான்கள் கஸ்னி நகரில் உள்ள ஒரு உளவு நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் ஒரு காவல்துறை அலுவலகத்தின் வளாகம் ஆகிய இடங்களில் இரண்டு சரக்கு வண்டிகளில் பதுக்கி வைக்கப்பட்ட வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர்.
இது குறித்து மாகாண ஆளுநர் முசா கான் அக்பர்சதா கூறுகையில், “இந்த தாக்குதலில் இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர். 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை 19 தீவிரவாதிகள் கூட்டாக சேர்ந்து நடத்தி உள்ளனர்” என்று அவர் கூறியுள்ளார்.
இந்தத் தாக்குதல் ஆப்கன் நாட்டில் கடந்த சில வாரங்களில் நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் சம்பவமாக கருதப்படுகின்றது. தலைநகர் காபூலைச் சுற்றியுள்ள மாகாணங்களில் ஒன்றான கஸ்னியில் தலிபான்களின் கை ஓங்கி உள்ளதாகவே அந்நாட்டு வட்டாரங்கள் கூறுகின்றன.
ஈராக்கில் ஆட்சியை கைப்பற்ற ஐஎஸ்ஐஎஸ் பெரும் ஆயுதப் போராட்டங்களை வெளிப்படுத்தி வருவதுபோல் தலிபான்களும் விரைவில் அதுபோன்ற நடவடிக்கைகளை தொடங்கும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.