ஐதராபாத், செப்டம்பர் 5 – ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக விஜயவாடா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு, தெலுங்கானா மாநிலம் கடந்த ஜூன் மாதம் உதயமானது.
தெலுங்கானா, ஆந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஐதராபாத் பொது தலைநகராக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலத்துக்கு புதிய தலைநகரைத் தேர்ந்தெடுக்க மத்திய அரசு சார்பில் சிவராமகிருஷ்ணா குழு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் ஆய்வு மேற்கொண்ட இந்த குழுவினர், தங்களுடைய அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தனர். இந்நிலையில் ஐதராபாத்தில் ஆந்திர மாநில சட்டபேரவை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், முதல்வர் சந்திரபாபுநாயுடு மாநில தலைநகருக்கான அறிவிப்பை வெளியிட்டார்.
அதில், கடந்த 1-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முழுவதுமாக விவாதிக்கப்பட்டும், பொதுமக்களின் கருத்துக்கேற்ப, மாநில தலைநகராக விஜயவாடா செயல்படும் என்று அறிவித்தார்.
இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் ஜெகன்மோகன்ரெட்டி பேசியதாவது, “ஆந்திர மாநில தலைநகராக விஜயவாடா அறிவித்தது வரவேற்கத்தக்கது.
ஆனால் தலைநகர் அமைப்பது குறித்து எதிர்க்கட்சியுடன் ஆலோசனை நடத்தாமல் சட்ட சபையில் முதல்வர் சந்திரபாபுநாயுடு நேரடியாகவே அறிவித்தது கண்டிக்கத்தக்கது.
எதனால் விஜயவாடா தலைநகராக அறிவிக்கப்பட்டது என எதிர்க்கட்சி மற்றும் பல்வேறு கட்சியினருக்கு விளக்கமளிக்க வேண்டும் என அவர் பேசினார்.