Home நாடு பெங்காலான் குபோர் இடைத்தேர்தல்: பாஸ் போட்டியிட வழிவிட்டது பிகேஆர்!

பெங்காலான் குபோர் இடைத்தேர்தல்: பாஸ் போட்டியிட வழிவிட்டது பிகேஆர்!

490
0
SHARE
Ad

Pengalan kuborபெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 10 – பெங்காலான் குபோர் இடைத்தேர்தலில் பாஸ் போட்டியிட பிகேஆர் சம்மதித்துள்ளது. வரும் 25-ம் தேதி கிளந்தானில் உள்ள இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

கடந்த இரு பொதுத் தேர்தல்களிலும் இத்தொகுதியில் பிகேஆர் போட்டியிட்டது.ஆனால் இருமுறையும் தேசிய முன்னணியிடம் தொகுதியைப் பறிகொடுத்தது.

பக்காத்தான் கூட்டணிக் கட்சிகள் இடையேயான ஒற்றுமையைப் பலப்படுத்தும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக டத்தோஷ்ரீ வான் அசிசா தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“மந்திரி பெசார் பதவிக்கான என் தகுதி குறித்து பாஸ் தலைவர் டத்தோஷ்ரீ ஹாடி அவாங் வெளியிட்ட கருத்துக்களையடுத்து, பக்காத்தான் கூட்டணிக் கட்சிகள் இடையேயான ஒத்துழைப்பு மற்றும் ஒருமித்த செயல்பாட்டின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினேன்.

“அம்னோ மற்றும் பாரிசானுக்கு எதிரான போராட்டத்தில் நமது சக்தியை ஒருமுகப்படுத்த, மக்களின் விருப்பங்கள் தொடர்பில் நாம் கவனம் செலுத்துவது முக்கியம் என நம்புகிறேன்,” என்று செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் வான் அசிசா.

பக்காத்தான் தலைவர்களுக்கு இடையே திறந்த மனத்துடன் கூடிய அதிகப்படியான சகிப்புத்தன்மை, பொறுமை ஆகியன இருந்தால் மட்டுமே தேசிய முன்னணியை எதிர்த்து தீவிரமாகப் போராட முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தேசிய முன்னணியைச் சேர்ந்த டத்தோ நூர் ஸகிடி ஓமார் கடந்த மாதம் காலமானதையடுத்து பெங்காலான் குபோர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

கடந்த பொதுத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சகாருன் இப்ராஹிம் (பிகேஆர்) மற்றும் சுயேச்சை வேட்பாளர் இசாட் புக்காரி இஸ்மாயில் புகாரியை 1736 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டார் நூர் சகிடி.

இத்தொகுதியை பிகேஆரிடம் ஒப்படைக்கும் முன்பு, கடந்த 1999 -ல் வெற்றி கண்ட பாஸ், 2004 -ல் தோல்வியடைந்தது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் சனிக்கிழமை நடைபெற உள்ளது.