தும்பாட், செப்டம்பர் 25 – இன்று நடைபெற்ற கிளந்தான் மாநிலத்தின் பெங்காலான் குபோர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் தேசிய முன்னணி-அம்னோ கட்சியின் வேட்பாளர் மாட் ராசி மாட் அலி (படம்-வலது) வெற்றி பெற்றுள்ளார்.
அதிகாரபூர்வமற்ற தகவல்களின் படி கடந்த பொதுத் தேர்தலை விட அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
தேசிய முன்னணிக்கு 9,960 வாக்குகள் கிடைத்தது. பாஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வான் ரோஸ்டி வான் இப்ராகிமிற்கு (படம்-இடது) 7,335 வாக்குகள் கிடைத்தன. சுயேச்சை வேட்பாளருக்கு வெறும் 37 வாக்குகளே விழுந்தன.
கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி இந்த தொகுதியில் மூன்று தவணைகளாக சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று வந்த டத்தோ நூர் சஹிடி ஒமார் காலமானதைத் தொடர்ந்து இந்த சட்டமன்றத் தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.
கடந்த பொதுத் தேர்தலில் டத்தோ நூர் சஹிடி 1,736 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.
ஆனால், இன்றைய தேர்தலில் தேசிய முன்னணியின் மாட் ராசி மாட் அலி 2,625 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளார்.