Home நாடு சிலாங்கூர் ஆட்சிக் குழு: பாஸ் 4 – பிகேஆர் 3 – ஜசெக 3; சுல்தான்...

சிலாங்கூர் ஆட்சிக் குழு: பாஸ் 4 – பிகேஆர் 3 – ஜசெக 3; சுல்தான் 10 பேருக்கு அனுமதி!

566
0
SHARE
Ad

Selangor Sultanஷா ஆலாம், செப்டம்பர் 25 – நாளை பதவியேற்கப் போகும் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவின் 10 பேர் அடங்கிய பட்டியலை, இன்று சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி சிலாங்கூர் சுல்தானிடம் சமர்ப்பித்து அவரது அனுமதியைப் பெற்றுள்ளார்.

தான் சமர்ப்பித்த 10 ஆட்சிக் குழு உறுப்பினர்களையும் சுல்தான் அங்கீகரித்துள்ளது கண்டு தான் மகிழ்ச்சி அடைவதாகவும் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் 2.40 மணிக்கு சிலாங்கூர் சுல்தானின் அரண்மனை வந்தடைந்த அஸ்மின் அலி பின்னர் சுல்தானைச் சந்தித்து ஆட்சிக் குழு உறுப்பினர்களின் பட்டியலைச் சமர்ப்பித்து அவரது ஒப்புதலைப் பெற்றார்.

#TamilSchoolmychoice

சுல்தானின் ஒப்புதலுக்கு அஸ்மின் அலி தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

நாளை சிலாங்கூர் மாநிலத்தின் புதிய ஆட்சிக் குழு பதவியேற்கும்.

இந்த ஆட்சிக் குழுவில் முந்தைய ஒப்பந்தப்படி, பாஸ் கட்சிக்கு நான்கு இடங்களும், பிகேஆர் கட்சிக்கு மூன்று இடங்களும், ஜசெகவுக்கு 3 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம், பிகேஆர் கட்சிக்கும், பாஸ் கட்சிக்கும் இடையில் மையம் கொண்டிருந்த அரசியல் கசப்புணர்வு, அஸ்மின் அலியின் சுமுகமான தலையீட்டின் காரணமாக, ஒரு முடிவுக்கு வரும் என்றும் சிலாங்கூரில் பக்காத்தான் ராயாட் என்ற மக்கள் கூட்டணியின் அரசியல் பணிகள் மீண்டும் முடுக்கிவிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் விவகாரத்தினால் மக்கள் கூட்டணி கட்சிகளிடையே ஏற்படும் பிளவைச் சரிப்படுத்தும் முக்கிய சக்தியாக அஸ்மின் அலி விளங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முதல் கட்டமாக, அவர் மக்கள் கூட்டணியின் மூன்று கட்சிகளின் தலைமைத்துவத்தின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளது, அவரது முதல் வெற்றியாகக் கருதப்படுகின்றது.