கோலாலம்பூர், செப்டம்பர் 25 – சில மாதங்களுக்கு முன்னால், தாங்கள் இருவரும் எடுத்துக் கொண்ட பாலியல் உறவுக் காட்சிகளை இணையத்தில் பதிவேற்றியதன் மூலம் மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் பிரபலமடைந்தவர்கள் அல்வின் டான், விவியன் லீ ஜோடி. இவர்களில் அல்வின் டான் தற்போது அமெரிக்காவுக்கு தப்பிச் சென்று அங்கு அரசியல் அடைக்கலம் நாடியுள்ளார்.
26 வயது அல்வினும், 25 வயது விவியனும், மலேசியாவின் தேச நிந்தனை சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவர்கள் இருவரும் பன்றிக் கறி உணவான ‘பக்கு தே’ என்ற உணவை உண்பது போல் புகைப்படம் எடுத்து, அதனை தங்களின் முகநூல் (பேஸ்புக்) பக்கங்களில் பதிவேற்றம் செய்து அந்தப் படத்தின் கீழ், “நோன்பு துறப்புக்கு வாழ்த்துகள்” என்ற அர்த்தத்தில் “செலாமாட் புக்கா புவாசா” என்ற வாசகத்தையும் பதிவு செய்தனர்.
புனித ரமலான் மாதத்தில், இஸ்லாமிய மதத்தினரை அவமதிக்கும் விதத்தில் இந்த நடவடிக்கை அமைந்தது எனக் கூறி அவர்கள் இருவர் மீதும் நீதிமன்றத்தில் தேச நிந்தனை சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. அதே நேரத்தில் அவர்கள் பதிவேற்றம் செய்த சர்ச்சைக்குரிய பாலியல் காட்சிகளின் காரணமாக, திரைப்பட தணிக்கைச் சட்டத்தின் கீழ், அவர்கள் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர்.
சேனல் நியூஸ் ஆசியா என்ற இணைய செய்தித் தளம் வெளியிட்ட செய்தியின்படி “அம்னோவின் சர்வாதிகார ஆட்சியிலிருந்து தப்பிக்க நாங்கள் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ளோம். தற்போது, அரசியல் அடைக்கலம் கோரி நாங்கள் சமர்ப்பித்துள்ள விண்ணப்பம் இறுதிக் கட்ட விசாரணையில் இருக்கின்றது. அமெரிக்காவில் எங்களின் புதிய வாழ்க்கையைத் துவக்குவதற்கான பணிகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்” என அல்வின் டான் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் அரசியல் அடைக்கலம்
கடந்த சில மாதங்களாக வெளியிடங்களில் எங்குமே காண முடியாத அளவுக்கு தலைமறைவாக இருந்த அல்வின் டான்-விவியன் லீ ஜோடியில் அமெரிக்க அரசாங்கத்திடம் அல்வின் டான் தனது அரசியல் அடைக்கல விண்ணப்பத்தை கடந்த மே மாதம் சமர்ப்பித்ததாக தெரிவித்திருக்கின்றார்.
சிங்கப்பூரிலுள்ள தேசியப் பல்கலைக் கழகத்தில் சட்டத் துறையில் பட்டப்படிப்பு மேற்கொண்டிருந்த அல்வின் டான், அவரது காதலியான விவியன் லீயுடன் இணைந்து எடுத்துக் கொண்ட பாலியல் உறவுக் காட்சிகளை தனது இணைய வலைத் தளத்தில் பதிவேற்றம் செய்ததன் மூலம் கடந்த 2012ஆம் ஆண்டு அக்டோபரில், சர்ச்சைக்குரிய மனிதராக வெளிச்சத்துக்கு வந்தார். சிங்கப்பூர், மலேசியா இரண்டு நாடுகளிலும் உடனடியாகப் பிரபலமானார்.
தொடர்ந்த சர்ச்சைகளின் காரணமாக ஆசியான் உபகாரச்சம்பளத்தின் கீழ் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த அவரை பல்கலைக் கழக நிர்வாகம் நீக்கியது.
தனது விவகாரத்தின் காரணமாக 2013இல் அமெரிக்க அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட மனித உரிமைகள் மீதிலான நாடுகளின் பட்டியலில், மலேசியா, இணையத்தில் கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நாடுகளுள் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது என்றும் அல்வின் டான் கூறியுள்ளார்.