தும்பாட், செப்டம்பர் 13 – தாய்லாந்து நாட்டின் எல்லையோரப் பகுதியில் அமைந்துள்ள பெங்காலான் குபோர் சட்டமன்றத் தொகுதி இன்று முதல் அடுத்த பத்து நாட்களுக்கு கடுமையான இடைத் தேர்தல் போட்டிக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளத் தொடங்கியுள்ளது.
பாஸ் கட்சியின் வான் ரோஸ்டி (இடது) – தேசிய முன்னணியின் மாட் ராசி (வலது)
இன்று நடைபெற்று முடிந்த வேட்பாளர் மனுத் தாக்கலின்படி தேசிய முன்னணியின் மாட் ராசி மாட் அய்ல், பாஸ் கட்சியின் வான் ரோஸ்டி வான் இப்ராகிம், சுயேச்சை வேட்பாளர் இசாட் புக்காரி இஸ்மாயில் புக்காரி ஆகிய மூவருக்கும் இடையிலான மும்முனைப் போட்டியாக பெங்காலான் குபோர் இடைத் தேர்தல் களம் உருவெடுத்துள்ளது.
49 வயது மாட் ராசி, ஓர் இஸ்லாமிய சமய ஆசிரியராவார். தும்பாட் அம்னோ தொகுதியின் நிர்வாகக் குழு உறுப்பினர்களில் ஒருவராவார்.
தும்பாட் வட்டார அலுவலகத்தில் துணை அதிகாரியான அவர் மலேசிய தேசியப் பல்கலைக் கழகத்தில் வரலாறும், மலாய் இலக்கியமும் படித்த பட்டதாரியாவார். ஆறு குழந்தைகளுக்கு அவர் தந்தையாவார்.
தும்பாட் வட்டாரத்திலுள்ள கம்போங் சிம்பாங்கான் பள்ளிவாசலில் இமாம் (தலைமை போதகர்) ஆன மாட் ராசி, அந்த வட்டாரத்தில் இலவச வகுப்புகளை வழங்கி வருவதன் மூலம் பிரபலமடைந்தவர்.
பாஸ் வேட்பாளர் 57 வயதான வான் ரோஸ்டி, தும்பாட் பாஸ் கட்சியின் செயலாளர் என்பதோடு, பெங்காலான் குபோர் சட்டமன்றத் தொகுதியின் மேற்பார்வையாளருமாவார். பாஸ் கட்சியின் பொறுப்புகளை ஏற்பதற்கு முன்பாக ஒரு கட்டுமான குத்தகையாளராக அவர் விளங்கி வந்தார்.
அவரும் அவரது குடும்பத்தினரும் பாரம்பரியமாக பாஸ் கட்சியின் தீவிர ஆதரவாளர்களாக விளங்கி வந்துள்ளனர்.
47 வயதான சுயேச்சை வேட்பாளரான இசாட் புக்காரி இஸ்மாயில் புக்காரி கட்டிட வடிவமைப்புத் துறையில் முன்னாள் விரிவுரையாளர் ஆவார். கோத்தாபாருவில் பிறந்தவரான அவர் தேர்தல் முடிவுகளில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்த வல்லவரல்ல என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
பெங்காலான் குபோர் இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு எதிர்வரும் செப்டம்பர் 25ஆம் நாள் நடைபெறும்