புதுடில்லி, செப்டம்பர் 12 – ‘ஏர்செல் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் இரண்டை, மலேசியாவைச் சேர்ந்த, ‘மேக்சிஸ்’ நிறுவனத்திற்கு விற்கும்படி, சிவசங்கரனை, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி நிர்பந்தம் செய்தார்’ என, டில்லி சிறப்பு நீதிமன்றத்தில், சி.பி.ஐ., தெரிவித்தது.
கடந்த 2006-ல், சென்னையைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிர்வாகி சிவசங்கரனுக்கு சொந்தமாக இருந்த, ஏர்செல் நிறுவனத்தை, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கும்படி கட்டாயப்படுத்தியதாக, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மீது, டில்லி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், கடந்த மாதம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த குற்றப்பத்திரிக்கையில், தயாநிதியின் சகோதரர் கலாநிதி உட்பட ஆறு பேரும், சன் தொலைக்காட்சி நிறுவனம் உட்பட, நான்கு நிறுவனங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை, நேற்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், ஏர்செல் – மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில், தயாநிதி உட்பட சிலர் மீது, சி.பி.ஐ., தரப்பில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள குற்றபத்திரிகையை, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி, நேற்று பரிசீலித்தார்.
அப்போது, சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோயல் கூறியதாவது, “கடந்த 2006-ல், ஏர்செல் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் இரண்டையும், மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கும்படி, ஏர்செல் உரிமையாளராக இருந்த சிவசங்கரனை, அப்போதைய மத்திய அமைச்சரான தயாநிதி, நெருக்குதல் தந்தார்.
சிவசங்கரனை வர்த்தகம் செய்யவிடாமல், தயாநிதி தடுத்தார். சிவசங்கரனின் நிறுவனம் தொடர்பான பல விவகாரங்களில் முடிவெடுக்காமல், அப்போதைய தொலைத்தொடர்பு அமைச்சரான தயாநிதி, காலம் தாழ்த்தினார்.
ஏர்செல் உட்பட, மூன்று நிறுவனங்களுக்கும் கொடுக்கப்பட்ட நெருக்கடியால், அந்த நிறுவனங்கள் வர்த்தகம் செய்ய முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டன.
சிவசங்கரனின் நிறுவனங்களை, மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கியதும், தொலைத்தொடர்பு அமைச்சகத்தில் நிலுவையில் இருந்த அனைத்துப் பிரச்சனைகளையும், தயாநிதி தீர்த்து வைத்தார்.
இதனால், மேக்சிஸ் நிறுவனம் மிகுந்த பலன் அடைந்தது. சிவசங்கரனின் நிறுவனங்கள் கேட்டிருந்த அனுமதி சான்றிதழ்கள் (லைசென்ஸ்கள்), ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு உட்பட, அனைத்துப் பிரச்சனைகளையும், தயாநிதி முன்னரே தீர்த்து வைத்திருந்தால், அந்த நிறுவனங்களை அதிக விலை கொடுத்து, மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கும்.
தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில், தயாநிதி தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார். மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு, அதிகஅளவில் சலுகை காட்டி உள்ளார் என சி.பி.ஐ., வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை, வரும் 22-ம் தேதிக்கு, சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒத்திவைத்தார்.