Home நாடு மேலும் ஒரு மலேசிய ஜிகாத் போராளி சிரியாவில் பலி!

மேலும் ஒரு மலேசிய ஜிகாத் போராளி சிரியாவில் பலி!

591
0
SHARE
Ad

Abu Mujahirகோலாலம்பூர், செப்டம்பர் 12- போர் பூமியாக மாறியுள்ள சிரியாவில் மேலும் ஒரு மலேசிய ஜிகாத் போராளிஅங்கு நடந்த சண்டையில் கொல்லப்பட்டார்.

21 வயதான அபு முஜாஹிர் (இயற்பெயர் முகமட் ஃபட்லான் ஷாகிடி)செவ்வாய்க்கிழமை அதிகாலை நிகழ்ந்த ஒரு தாக்குதல் நடவடிக்கையின் போதுகொல்லப்பட்டதாகவும், அவருடன் இருந்த மற்றொரு மலேசிய ஜிகாத் போராளியான  உஸ்தாஸ் முகமட் லோட்ஃபி அரிஃபின் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முகமட் ஃபட்லானின் மரணம் குறித்த தகவல் ‘வீரத்தியாகிகளை நேசிப்பவர்கள்’ என்ற பெயரில் அமைந்துள்ள முகநூல் (ஃபேஸ்புக்) பக்கத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

“அபு முஜாஹிர் என்ற மலேசிய ஜிகாதி போராளியின் செயல்கள் கடவுளால் எடைபோடப்படும். கடவுள் விரும்பினால் அவர் வீரத் தியாகியாவார்,” என்று அந்தப் பக்கத்தில் புதன்கிழமை பதிவு போடப்பட்டுள்ளது.

கெடா மாநிலத்தின் கூலிம் பகுதியைச் சேர்ந்த ஃபட்லான் பல மாதங்களுக்கு முன்பே சிரியா சென்றார். அங்கு மோதலில் ஈடுபட்டுள்ள மலேசியர்களில் இவரே மிக இளையவர் என்று கூறப்படுகிறது.

கடைசியாக தனது முகநூல் (ஃபேஸ்புக்) பக்கத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதி பதிவிட்டுள்ளார் ஃபட்லான். கடந்த மே மாதம், தற்கொலை போராளியான அகமட் தார்மிமி மாலிகி என்ற மலேசிய ஜிகாதி, ஒரு வாகனத்தில் நிரப்பப்பட்ட வெடிகுண்டுகளுடன் சென்று ஈராக் போலீஸ் தலைமையகத்தின் மீது அதை மோதச் செய்து பலியானார். இந்தச் சம்பவத்தில் 25 போலீசார் கொல்லப்பட்டனர்.

அர்சே பகுதியில் நிகழ்ந்த மற்றொரு மோதலின்போது கொல்லப்பட்ட மாட் சோ, உயிரிழந்த மலேசிய ஜிகாதிகளின் பட்டியலில் இரண்டாவதாக இடம்பிடித்தார்.