கோலாலம்பூர்: சிரியாவில் உள்ள டாயிஷ் தீவிரவாத அமைப்புடன் இணைய இருந்தவர்களை விட, இந்நாட்டில் நிரந்தரமாக தங்கியிருக்கும் பயங்கரவாதிகள் ஆபத்தானவர்கள் என்று புக்கிட் அமான் பயங்கரவாத தடுப்புத் துறையின் துணை இயக்குனர் அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.
சிரியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட பின்னர், மலேசியா திரும்புவதற்கு விண்ணப்பித்திருக்கும் 40 மலேசியர்களை காவல் துறையினர் எவ்வாறு கண்காணிக்கிறார்கள் என்று கேட்ட போது அயோப் இவ்வாறு கூறினார்.
அவர் இந்தோனிசியா மற்றும் பிலிப்பைன்ஸில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய தீவிரவாதிகளைப் பற்றி குறிப்பிட்டுக் கூறினார். அது தொடர்பாக, மலேசியா மற்றும் இந்தோனிசியாவில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்ட 16 டாயிஷ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதை உறுதி படுத்தினார். அவர்கள் கடந்த மாதம் கெனிங்காவில் கைது செய்யப்பட்டனர்.
சிரியாவில் ஜிஹாட்டில் சேர விரும்பிய பயங்கரவாதிகள், அங்கு செல்லத் தவறியதால் இப்பிராந்தியத்தில் அத்திட்டமிடலை மேற்கொண்டதாக அவர் கூறினார்.
“அப்படியானால் சிரியாவுக்குச் செல்ல இருந்தவர்களை விட சிரியாவுக்குச் செல்ல முடியாதவர்களே ஆபத்தானவர்கள்.” என்று அவர் கூறினார். தற்போது அந்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 40 மலேசியர்கள் நாடு திரும்பியபோது கண்காணிக்கும் திறன் காவல் துறைக்கு உண்டு என்றும் அவர் கூறினார்.