ஷிமோகா, செப்டம்பர் 12 – லிங்கா படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பு நாளன்று அங்கு அவரைக் காண வந்திருந்த மக்களை ரஜினிகாந்த் சந்தித்து அளவளாவியுள்ளார்.
மிக நீண்ட வரிசையில் காத்திருந்து அவரைச் சந்தித்தும் படமெடுத்துக் கொண்டும் வாழ்த்துகள் பெற்றும் அந்த வட்டார மக்கள் மகிழ்ந்தனர்.
ரஜினியின் லிங்கா இறுதிக் கட்டப் படப்பிடிப்பு ஷிமோகாவில் நடந்து வருகிறது. இந்தப் படப்பிடிப்பில் ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நேற்று முன்தினம் படப்பிடிப்பின் கடைசி நாள்.
ரஜினியைப் பார்ப்பதற்காக கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் திரண்டு வந்திருந்தனர். தமிழகத்திலிருந்தும் பல ரசிகர்கள் ரஜினியைப் பார்க்க ஷிமோகாவுக்கு வந்து, சாகர் என்ற இடத்தில் அவர் தங்கியிருக்கும் விடுதிக்கு முன் குவிந்துவிட்டனர்.
முதலில் யாரையும் சந்திக்கும் திட்டத்தில் இல்லை ரஜினி. ஏனெனில் சண்டைக் காட்சியில் நடித்ததில் அவரது இடது கையில் வலி ஏற்பட்டதால் ஓய்வில் இருந்தார்.
ஆனால் பெண்கள் குழந்தைகளுடன் வந்து காத்திருக்கும் தகவல் அறிந்ததும், தன் உதவியாளர்களை அனுப்பி அனைவரையுமே பார்ப்பதாக உறுதியளித்தார் ரஜினி.
பின்னர் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று ரஜினியைக் காண காத்திருந்தனர். இவர்களில் பெருமளவு பெண்கள்தான். கைக் குழந்தைகளுடன் வந்து ரஜினியைப் பார்த்தனர்.
நீண்ட நேரம் நின்று கொண்டே, வந்திருந்த அத்தனை ரசிகர்களையும் பொது மக்களையும் சந்தித்தார் ரஜினி. அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பலரும் அவர் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றனர். பல ரசிகர்கள் அவரைக் கட்டிப் பிடித்தும், கைகளில் முத்தம் கொடுத்தும் மகிழ்ந்தனர். பெண்கள் தங்கள் குழந்தைகளை அவரிடம் கொடுத்து ஆசி பெற்றனர். அனைவரையும் பத்திரமாக ஊருக்குத் திரும்புமாறு கேட்டுக் கொண்டார் ரஜினி.