காஷ்மீர், செப்டம்பர் 12 – வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்படத் தொடங்கியுள்ளன. ராம்பன் மாவட்டத்திலுள்ள நஷ்ரி என்ற பகுதியில் பல இடங்களில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதனால் ஜம்மு – ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஸ்ரீநகரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் நேரில் பார்வையிட்டார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் உமர் அப்துல்லாவுடன் ஆலோசனை நடத்திய அவர், மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என உறுதியளித்தார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து இதுவரை ஒரு லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளோரை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
எரிபொருள் தட்டுப்பாட்டை போக்க 375 வாகனங்களில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவை ஜம்மு காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாநில அரசு உரிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய ஒமர் அப்துல்லா, அரசு செயல்படாத வகையில் அரசுக் கட்டடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதாக கூறினார்.
முதல் 36 மணி நேரம் அரசு முற்றிலும் முடங்கிப்போனதாக கூறிய அவர், மூன்று நாட்களாக மாநில அமைச்சர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்தார்.
காவல்துறை தலைமை அலுவலகம், சட்டப்பேரவை அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக ஒமர் அப்துல்லா கூறினார்.
ஜம்மு காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புக்குழுவைச் சேர்ந்த சுமார் 1000 வீரர்கள் ராணுவத்தினரின் உதவியுடன் செயல்பட்டு வருவதாகவும்,
இயல்பு நிலை திரும்ப இன்னும் 10 நாட்கள் ஆகும் என்று ராணுவத்தினர் கூறியுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் 4-வது பட்டாலியன் தலைவர் வி.கே வர்மா தெரிவித்துள்ளார்.