Home நாடு இன்று பெங்காலான் குபோர் இடைத் தேர்தல் வேட்புமனு – பாஸ், அம்னோ மோதல்!

இன்று பெங்காலான் குபோர் இடைத் தேர்தல் வேட்புமனு – பாஸ், அம்னோ மோதல்!

442
0
SHARE
Ad

PAS UMNOதும்பாட், செப்டம்பர் 13- பெங்காலான் குபோர் இடைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, இன்று வேட்பு மனுத்தாக்கல் நடைபெறுகின்றது.

தேசிய முன்னணி வேட்பாளர் மாட் ராசியை எதிர்த்து பாஸ் சார்பில் வர்த்தகரான வான் ரோஸ்டி வான் இப்ராஹிம் களமிறக்கப்படுவதாக பாஸ் அறிவித்துள்ளது.

இருவருக்கும் இடையே இடைத்தேர்தலில் நேரடிப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

தேசிய முன்னணி வேட்பாளர் மாட் ராசி ஒரு இஸ்லாமிய சமய போதனை ஆசிரியர் ஆவார்.

வான் ரோஸ்டி, தும்பாட் பகுதி பாஸ் செயலாளரும், பெங்காலான் குபோர் தொகுதியின் பொறுப்பாளரும் ஆவார்.

கடந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் இங்கு வெற்றி பெற்ற டத்தோ நூர் சகிடி காலமானதையடுத்து இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

கடந்த பொதுத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சகாருன் இப்ராஹிம் (பிகேஆர்) மற்றும் சுயேச்சை வேட்பாளர் இசாட் புக்காரி இஸ்மாயில் புகாரியை 1736 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டார் தேசிய முன்னணியின் டத்தோ நூர் சகிடி.

இத்தொகுதியை பிகேஆரிடம் ஒப்படைக்கும் முன்பு, கடந்த 1999இல் வெற்றி கண்ட பாஸ், 2004இல் இதே தொகுதியில் தோல்வியடைந்தது. இம்மாதம் 25ஆம் தேதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெறும்.

சிக்கலான உறவில் பாஸ்-பிகேஆர்

பெங்கலான் குபோர் தொகுதியில் கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் பிகேஆர் போட்டியிட்டாலும், இந்த முறை பாஸ் கட்சிக்கு அது தொகுதியை விட்டுக் கொடுத்துள்ளது.

சிலாங்கூர் மந்திரி பெசார் விவகாரத்தில் விரிசல் கண்ட பிகேஆர்-பாஸ் கட்சிகளின் அரசியல் உறவு பெங்காலான் குபோர் இடைத் தேர்தலில் மீண்டும் பரிசோதனைக்குள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சிலாங்கூர் மந்திரி பெசார் விவகாரத்தினால் எழுந்துள்ள பல்வேறு சர்ச்சைகள் அடங்குவதற்கு முன்பே – புதிய சிலாங்கூர் மந்திரி பெசார் நியமனம் செய்யப்படுவதற்கு முன்பே – பெங்காலான் குபோர் இடைத் தேர்தல் வந்துள்ளதால், இரண்டு கட்சிகளும் இந்த இடைத் தேர்தலுக்காக இணைந்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

பாஸ்-பிகேஆர் விரிசலை நன்கு பயன்படுத்திக் கொண்டு, அதை மையமிட்டு தேசிய முன்னணி தனது பிரச்சாரத்தை முடுக்கி விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் தேசிய முன்னணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருதப்படுகின்றது.

இருப்பினும், சிலாங்கூரில் பாஸ் கட்சிக்கு நேசக்கரம் நீட்டி, சுமுகமான சூழலை உருவாக்கி, அம்னோ-பாஸ் இணைந்த கூட்டணி அரசாங்கத்தை சிலாங்கூரில் அமைக்க முயன்ற தேசிய முன்னணி தற்போது பாஸ் கட்சியுடன் மோத வேண்டிய இக்கட்டான சூழலுக்கு ஆளாகியுள்ளது.

பெரும்பான்மையாக மலாய் வாக்காளர்களை மட்டுமே கொண்டுள்ள தொகுதி என்பதால், பாஸ், பிகேஆர், அம்னோ ஆகிய மூன்று கட்சிகள் மட்டுமே இங்கே வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்ய முடியும்.