கோலாலம்பூர், செப்டம்பர் 15 – கடந்த சனிக்கிழமை செப்டம்பர் 13ஆம் நாள் கோலாலம்பூரின் நெகாரா அரங்கில் பிரம்மாண்டமான அளவில் நடைபெற்ற “சைமா” எனப்படும் தென்னிந்திய திரைப்பட அனைத்துலக விருதளிப்பு விழாவில் பல்வேறு பிரிவுகளில் தமிழ்ப் படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
அந்த விருதுகளின் பட்டியல் இதோ:
சிறந்த குழந்தை நட்சத்திரம் – சாதனா
தங்கமீன்கள் படத்தில் நடித்ததற்காக சாதனாவிற்கு வழங்கப்பட்டது. துபாயில் தற்போது தங்கி படித்துக் கொண்டிருக்கும் அவர் நேரில் வந்து வாங்கிக் கொண்டார். தங்கமீன்கள் படத்தில் பார்த்ததற்கு வித்தியாசமாக தற்போது வளர்ந்து விட்டார்.
சிறந்த ஒளிப்பதிவாளர் – ராஜீவ் மேனன்
கடல் படத்திற்காக ராஜீவ் மேனனுக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருது வழங்கப்பட்டது. திரையுலகில் அழகான, அம்சமான, கம்பீரமான ராஜீவ் மேனன் கோட் சூட்டுடன் மேடையேறி பரிசை கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரிடமிருந்து வாங்கிக் கொண்டார்.
“இவ்வளவு ஸ்மார்ட்டாக இருக்கும் நீங்கள் ஏன் இதுவரை நடிக்கவில்லை” என சிவா அவரைக் கலாய்க்க “அப்போது கேட்டார்கள். ஏனோ நடிக்கவில்லை. இப்போது காலங் கடந்துவிட்டது” என சமாளித்தார்.
சிறந்த சண்டைக் காட்சி இயக்குநர் – அனல் அரசு
பாண்டிய நாடு படத்தில் இறுதிக் கட்ட சண்டைக் காட்சியை வித்தியாசமாக அமைத்த அனல் அரசுவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. நேரில் வந்து பெற்றுக் கொண்டார்.
சிறந்த நடன இயக்குநர் – ஷோபி
ஆரம்பம் படத்தில் சிறந்த நடனக் காட்சிகளை அமைத்தற்காக நடன இயக்குநர் ஷோபிக்கு இந்த விருது வழங்கப்பட்டது. நேரில் வந்து பெற்றுக் கொண்டார்.
சிறந்த பாடலாசிரியர் – நா.முத்துக்குமார்
தங்கமீன்கள் படத்தில் ஒலித்த “ஆனந்த யாழை மீட்டுகின்றாய்” பாட்டுக்காக பாடலாசிரியர் நா.முத்துக்குமார் நேரில் வந்து பரிசைப் பெற்றுக் கொண்டார்.
பின்னணிப் பாடகர் – பாடகி : ஸ்ரீராம் பார்த்தசாரதி – சக்திஸ்ரீ
“ஆனந்த யாழை மீட்டுகிறாய்” பாடலுக்காக, சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருதைப் பெற்றுக் கொள்ள வந்த ஸ்ரீராம் பார்த்தசாரதி அந்தப் பாட்டை ஓரிரு வரிகள் பாடிக் காட்டியதோடு, தான் பாடிய மற்ற பாடல்களின் சில வரிகளையும் பாடிக் காட்டி, ரசிகர்களை மகிழ்வித்தார்.
கடல் படத்தில் ஒலித்த ‘நெஞ்சுக்குள்ள உன்னை முடிஞ்சிருக்கேன்’ பாடலுக்காக சக்திஸ்ரீ சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான விருதை நேரில் வந்து பெற்றுக் கொண்டார்.
சிறந்த இசையமைப்பாளர் – அனிருத்
எதிர் நீச்சல் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது அனிருத்துக்கு வழங்கப்பட்டது. ஆனால், அவர் நேரில் வராத காரணத்தால், அவருக்குப் பதிலாக சிவகார்த்திகேயன் பரிசை பெற்றுக் கொண்டார்.
சிறந்த அறிமுக நடிகர் கௌதம் கார்த்திக் – அறிமுக நடிகை -ஸ்ரீதிவ்யா
கடல் படத்திற்காக சிறந்த அறிமுக நடிகர் விருது கௌதம் கார்த்திக்குக்கு வழங்கப்பட்டது. அவர் கேரளாவில் படப்பிடிப்பில் இருக்கின்றார் என்பதால் அவரால் வரமுடியவில்லை எனக் கூறி அவருக்குப் பதிலாக அவரது தந்தை நடிகர் கார்த்திக் (படம்) பெற்றுக் கொண்டார்.
கடல் படப்பிடிப்பின்போது தான் நேரில் சென்று மகனின் நடிப்பைப் பார்க்கவில்லை என்று கூறிய கார்த்திக், ஒருநாள் இயக்குநர் மணிரத்னம் அவரை அழைத்து “உங்கள் மகன் உங்களை விட இரண்டு மடங்கு திறமையோடு இருக்கின்றான்” எனப் பாராட்டு தெரிவித்ததாக, தந்தையாக பெருமிதம் கொண்டார்.
“கௌதமின் அண்ணன் வந்திருக்கின்றார் அவரது பரிசை வாங்குவதற்கு…” என அறிவிப்பாளர் சிவா, கார்த்திக்கை கலாய்க்க, கார்த்திக்கோ “இல்லை. தப்பா சொல்றீங்க.. நான் அவரது தம்பி…” என்று பதிலுக்கு கலாய்த்தார், இரசிகர்களின் கைத்தட்டலுடன்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஊதாக் கலர் ரிப்பனோடு இரசிகர்களைக் கொள்ளை கொண்ட ஸ்ரீதிவ்யாவுக்கு சிறந்த அறிமுக நடிகை வழங்கப்பட்டது.
மேடையேறி அவர் பரிசை நேரில் வாங்கியபோதுதான் அவரும் இந்த விழாவிற்காக வந்திருக்கின்றார் என்பது இரசிகர்களுக்கு தெரிந்தது.
சிறந்த அறிமுக தயாரிப்பாளர் – நடிகர் விஷால்
பாண்டிய நாடு படத்தைத் தயாரித்த விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில் நடிகர் விஷால் சிறந்த அறிமுக தயாரிப்பாளர் விருதைப் பெற்றார். அவரால் வர முடியாததால், அவருக்குப் பதிலாக நடிகை குஷ்பு பெற்றுக் கொண்டார். தனது நெருங்கிய நண்பர் விஷாலுக்காக இந்த விருதைப் பெற்றுக் கொள்வதில் பெருமிதம் கொள்வதாக குஷ்பு குறிப்பிட்டார்.
இந்தப் பரிசை வழங்க மேடையேறிய “அஞ்சான்” பட இயக்குநர் லிங்குசாமி, விஷாலை வைத்து சண்டைக் கோழி படத்தை இயக்கியதையும், தான் துணை இயக்குநராக, வாங்கிய 250 ரூபாய் முதல் சம்பளம், விஷால் குடும்பத்தின் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து பெற்றது என்பதையும் நினைவு கூர்ந்தார்.
சிறந்த அறிமுக இயக்குநர் – நலன் குமாரசாமி
சூது கவ்வும் படத்தை இயக்கிய நலன் குமாரசாமிக்கு சிறந்த அறிமுக இயக்குநர் விருது வழங்கப்பட்டது. அவரால் வர இயலவில்லை என்பதால் அவருக்குப் பதிலாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சி.வி.குமார் நேரில் வந்து பரிசைப் பெற்றுக் கொண்டார்.
சிறந்த துணை நடிகைக்கான விருது பெறும் நந்திதா – அவருக்கு அருகில் இலட்சுமி ராய்….
சிறந்த துணை நடிகர் ஆர்யா – துணை நடிகை நந்திதா
ஆரம்பம் படத்தில் நடித்த ஆர்யாவுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும், எதிர் நீச்சல் படத்தில் நடித்தற்காக நடிகை நந்திதாவுக்கு சிறந்த துணை நடிகை விருதும் வழங்கப்பட்டது.
ஆர்யா விருது வாங்க நேரில் வரவில்லை. நேரடியாக வந்திருந்து விருதைப் பெற்றுக் கொண்ட நந்திதா எதிர் நீச்சல் படத்தில் நடித்த சில அனுபவங்களைத் தனது ஏற்புரையில் பகிர்ந்து கொண்டார்.
சிறந்த எதிர்மறை கதாபாத்திர நடிப்பு – நடிகை நீத்து சந்திரா
வில்லன், வில்லி எனப் பிரித்துக் கொடுக்காமல் சிறந்த எதிர்மறைக் கதாபாத்திர விருதாக (நெகடில் ரோல்) வழங்கப்பட்ட இந்த விருதை ஆதிபகவன் படத்திற்காக நடிகை நீத்து சந்திரா நேரில் வந்து பெற்றுக் கொண்டார்.
சிறந்த பரபரப்பூட்டிய நடிகருக்கான விருது பெற்ற சிவகார்த்திகேயனும், சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது பெற்ற சூரியும்….
சிறந்த நகைச்சுவை நடிகர் – சூரி
சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை வாங்க மேடையேறிய ‘பரோட்டா’ சூரி கண்கலங்கி விட்டார். இதுதான் தனது முதல் விருது என்று கூறி தனக்கு விருது வழங்கிய சைமாவுக்கு நன்றி கூறியவர், மலேசிய இரசிகர்கள் ‘தாயா புள்ளையாக பழகுறாங்க’ என நெக்குருகி நெகிழ்ந்துவிட்டார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்காக அவருக்கு சிறந்த நகைச்சுவை நடிகர் விருது வழங்கப்பட்டது.
இரண்டு நாள் நிகழ்ச்சிகள் முழுக்க சிவகார்த்திகேயனுடனேயே சுற்றிக் கொண்டிருந்தார் சூரி.
சிறந்த இயக்குநர் – பாலா
சிறந்த இயக்குநருக்கான விருது பரதேசி படத்திற்காக பாலாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அவர் நேரில் வரவில்லை.
நேரில் வராத பல கலைஞர்களின் விருதை அவர்களின் சார்பில் அறிவிப்பாளர் சிவா பெற்றுக் கொண்டார். “இந்த விழாவில் நான்தான் அதிகமாக விருதுகளை வாங்கியிருக்கின்றேன்” என கிண்டலாகப் பெருமைப்பட்டுக் கொண்டார் சிவா.
விருது வாங்க வந்த சிவகார்த்திகேயன் உரையாற்றுகின்றார். (இடமிருந்து வலமாக: அறிவிப்பாளர் சிவா, அமலா பால், சிவகார்த்திகேயன், மலேசிய முன்னாள் வெளியுறவுத் துறை துணையமைச்சர் கோகிலன் பிள்ளை)
சிறந்த படம் சூது கவ்வும்
சிறந்த தமிழ்ப்படமாக ‘சூது கவ்வும்’ தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் தயாரிப்பாளர் சி.வி.குமார் நேரடியாக வந்து பரிசைப் பெற்றுக் கொண்டார்.
சிறந்த நடிகர் – சிறந்த நடிகை : தனுஷ் – திரிஷா
சிறந்த நடிகருக்கான விருது மரியான் படத்தில் நடித்ததற்காக, தனுஷூக்கு வழங்கப்பட்டது. அவர் வராத காரணத்தால், அவருக்கு நெருங்கிய நண்பர் சிம்பு பெற்றுக் கொள்வார் என அறிவிப்பாளர் அறிவித்தார். சிம்புவும் பெருந்தன்மையாக மேடையேறி பெற்றுக் கொண்டார்.
சிறந்த நடிகையாக என்றென்றும் புன்னகை படத்தில் நடித்ததற்காக திரிஷாவுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த விமர்சகர் பாராட்டு விருது – நடிகை பார்வதி
திரிஷா “என்றென்றும் புன்னகை” படத்தில் அப்படி என்ன நடித்துவிட்டார் சிறந்த நடிகை விருது கொடுப்பதற்கு என்று யாராவது கேட்டுவிடுவார்களோ என்பதற்காக, விமர்சகர்களின் பாராட்டு பெற்ற சிறந்த நடிகை (கிரிடிக் அவார்ட்) விருது மரியான் படத்தில் நடித்ததற்காக பார்வதிக்கு வழங்கப்பட்டது.
அவரும் நேரடியாக வந்திருந்து விருதைப் பெற்றுக் கொண்டார். ஆளே அடையாளம் தெரியவில்லை. கவர்ச்சி ஆடைகளில் வலம் வந்த நடிகைகளை மட்டுமே நோட்டமிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு, மேடையேறிய பின்னர்தான் பார்வதியும் வந்திருக்கின்றார் என்பது தெரிந்தது.
சிறந்த இயக்குநர் – பாலா
பரதேசி படத்திற்காக சிறந்த இயக்குநர் விருதைப் பெற்ற பாலா, நேரில் வர இயலாத காரணத்தால், அவருக்குப் பதிலாக இயக்குநர் விஜய் பெற்றுக் கொண்டார்.
சிறந்த பரபரப்பூட்டிய (சென்சேஷனல்) நடிகர் விருது – சிவகார்த்திகேயன்
சிறந்த சென்சேஷனல் நடிகர் (இது போன்ற ஆங்கில வார்த்தைகளுக்கெல்லாம் பொருத்தமான தமிழ் வார்த்தையை முதலில் கண்டுபிடித்துவிட்டு, அதன் பின்னரே அதற்கேற்ப விருது கொடுங்கள் என அடுத்த முறை ஏற்பாட்டாளர்களுக்கு உத்தரவு போடவேண்டும்) விருது சிவகார்த்திகேயனுக்கு வழங்கப்பட்டது.
விழா அரங்கில் நீண்ட நேரம் இருந்த சிவகார்த்திகேயன், நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கெல்லாம் கிளம்பி விட்டார். ஆனால், அதற்குப் பின்னர்தான் இந்த விருது அறிவிக்கப்பட்டது. எனவே, வாங்குவதற்கு அவர் நேரில் வரவில்லை.
இருப்பினும் அனிருத்துக்கு வழங்கப்பட்ட சிறந்த இசையமைப்பாளர் விருதை அவருக்குப் பதிலாகப் பெற்றுக் கொள்ள மேடையேறிய சிவகார்த்திகேயன் ரஜினிகாந்த் சைமா விருதுக்கு வந்திருந்தால் என்ன பேசியிருப்பார், எப்படிப் பேசியிருப்பார் என்று ரஜினியில் நகல் குரலாக (மிமிக்ரி) அச்சு அசலாகப் பேசிக் காட்டி அனைவரின் கைத்தட்டலையும் பெற்றார்.
சிறப்பு பாராட்டு பெற்ற படம் – பரதேசி
பரதேசி படத்திற்கு விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற படம் என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது.
இந்த ஆண்டில் திருமணம் செய்து கொண்ட சிறந்த தம்பதிகள் விருதை பாக்யராஜ்-பூர்ணிமாவிடமிருந்து பெறும் இயக்குநர் விஜய் – அமலா பால்…
இந்த ஆண்டின் சிறந்த தம்பதிகள்
இந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட இயக்குநர் விஜய், நடிகை அமலா பால் இருவருக்கும் இந்த ஆண்டிற்கான சிறந்த தம்பதிகள் விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த இருவரும் நேரில் விருதைப் பெற்றுக் கொண்டார்கள்.
தேனிலவு கோலாலம்பூரிலும் தொடர்கிறது போலும்!
தென்னிந்தியாவின் வளரும் நட்சத்திரம் – இலட்சுமி ராய்
ஏற்கனவே ‘நன்கு வளர்ந்து விட்ட’ இலட்சுமி ராய்க்கு தென்னிந்தியாவின் வளரும் நட்சத்திரம் விருது (ரைசிங் ஸ்டார்) வழங்கப்பட்டது.
நடிகர் சிம்புவுக்கு சிறந்த ஸ்டைல் நடிகர் விருது வழங்கும் திரிஷா, ஸ்ரேயா, தமன்னா…..
சிறந்த ஸ்டைல் நடிகர் – சிம்பு
தென்னிந்திய திரையுலகின் சிறந்த ஸ்டைல் நடிகர் சிம்பு என்று அறிவித்து விருது கொடுத்தார்கள். விருதை வாங்க வந்த சிம்புவே எந்த அர்த்தத்தில் இந்த விருதை வழங்கினார்கள் என்பது தெரியவில்லை, சினிமாவில் ஸ்டைல் நடிகர் என்றால் அது ரஜினிதான் என்று கூறினார்.
ஆனால் பரிசை வாங்கியவர்களில் அவருக்குத்தான் மச்சம் போலும், அழகு தேவதைகளான நடிகைகள் திரிஷா, ஸ்ரேயா, தமன்னா மூவரும் இணைந்து அவருக்கு இந்த பரிசை வழங்கினார்கள்.
கடந்த இரண்டு வருடங்களாக சிம்பு நடித்த படம் எதுவும் வராத நிலையில் அவருக்கு சிறந்த ஸ்டைல் நடிகர் விருது வழங்கியது நெருடல்தான்.
அசினுக்கு விருது வழங்கும் ஸ்ரீதேவியும், சிரஞ்சீவியும் ! யார் அழகு அசினா? ஸ்ரீதேவியா?
சிறந்த இளைய சமுதாய அடையாள விருது – நடிகை அசின்; நடிகர் புனித் ராஜ்குமார்
ஏறத்தாழ ‘பழைய’ நடிகையாகிவிட்ட – தமிழ்ப் படங்களில் தலையே காட்டாத – நடிகை அசினை அழைத்து வந்து ‘யூத் ஐகோன்’ (Youth Icon) – அதாவது இளைய சமுதாயத்தின் சிறந்த அடையாள விருது என்ற பெயரில் விருது ஒன்றைக் கொடுத்தார்கள்.
விருது வாங்க வந்த இன்றைய அசினை விட, வழங்க வந்த அன்றைய மயிலு ஸ்ரீதேவி, அனைவரின் வாயும் பிளக்கும் வண்ணம், ஊடுருவிப் பார்க்கக் கூடிய புடவையில் வந்து அசத்தினார்.
ஆண் நடிகர்களுக்கான பிரிவில் இதே விருது கன்னடப் படவுலகின் புனித் ராஜ்குமாருக்கு (காலமான பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன்) வழங்கப்பட்டது.
வாழ்நாள் சாதனையாளர் விருது – கே.பாக்யராஜ்
வாழ்நாள் சாதனையாளர் விருது பிரபல இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜூவுக்கு வழங்கப்பட்டது. மனைவி பூர்ணிமா ஜெயராமுடன் நேரில் வந்து பாக்யராஜ் விருதைப் பெற்றுக் கொண்டார்.
(பாக்யராஜ் பெற்ற இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது தொடர்பான தகவல்கள் தனிச்செய்தியாக இடம் பெறும்)
சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கான விருது – நடிகர், முன்னாள் இந்திய சுற்றுலாத் துறை அமைச்சர் சிரஞ்சீவி
இந்தியாவின் சுற்றுலாத் துறை அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில், சுற்றுலாத் துறை வளர்ச்சி பெற சிறந்த சேவையாற்றிய நடிகர் சிரஞ்சீவிக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. விருதை மலேசியாவின் கூட்டரசுப் பிரதேசங்களுக்கான அமைச்சரும் முன்னாள் சுற்றுலாத் துறை அமைச்சருமான தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் வழங்கினார்.
(சிரஞ்சீவிக்கு வழங்கப்பட்ட விருது தொடர்பான தகவல்கள் தனிச் செய்தியாக இடம் பெறும்)
சிறப்புப் பரிசு – அஸ்ட்ரோவின் டாக்டர் ராஜாமணி
அஸ்ட்ரோ மற்றும் தொலைக்காட்சி தமிழ் அலைவரிசைகளின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டதற்காக அஸ்ட்ரோ நிறுவனத்தின் இந்தியப் பிரிவுக்கான உயர்நிலை உதவித் தலைவர் டாக்டர் ராஜாமணிக்கு சிறப்பு விருது இந்த சைமா விருதளிப்பில் வழங்கப்பட்டது.
அஸ்ட்ரோவின் டாக்டர் ராஜாமணிக்கு விருது வழங்கும் நடிகை குஷ்பு….
(டாக்டர் ராஜாமணிக்கு வழங்கப்பட்ட விருது தொடர்பான தகவல்கள் தனிச் செய்தியாக இடம்பெறும்)
நேரடியாக நிகழ்வுகளைக் கண்டு பிரத்தியேகத் தொகுப்பும் – படங்களும் : செல்லியல் ஆசிரியர் குழு